காய்கறி விலை கிடு கிடு உயர்வு

கோலாலம்பூர், ஏப்.5-

கிள்ளான் பள்ளதாக்கு முழுவதும் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

சமுதாய பற்றில்லாத ஒரு சில வியாபாரிகள் காய்கறிகளின் விலையை விருப்பம்போல உயர்த்தி விற்பனை செய்து வருகிறார்கள்.

என்ன விலை போட்டாலும் சொன்ன விலைக்கு காய்கறிகளை பயனீட்டாளர்கள் வாங்கிச் செல்லும் நிலையை கொரோனா ஏற்படுத்தியிருப்பதை சாதகமாகப் பயன்படுத்தி வியாபாரிகள் கொள்ளை லாபத்தை சம்பாதித்து வருகின்றனர்.

வீட்டுக்கே வந்து காய்கறிகளை வழங்குகிறோம் என்ற பெயரால் கூடுதலாக வீட்டுக்கு 10 வெள்ளி வீதம் பல இடங்களில் வசூலிக்கப்பட்டு வருகிறது.

கிலோ 3 வெள்ளி 80 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட வேண்டிய தக்காளியின் விலை 7 வெள்ளியை எட்டியுள்ளது.

அவரைக்காய் விலை கிலோ 10 வெள்ளி வரையில் விற்கப்படுகிறது.

கிலோ 3 வெள்ளி 80 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வெள்ளைப் பூண்டு 7 வெள்ளிக்கு பண்டமாரான் சந்தைப் பகுதியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தாமான் செந்தோசாவில் இயங்கி வரும் எம்.ஆர் மினி மார்க்கெட், பவித்ரா மினி மார்க்கெட்டில் இந்திய வெங்காயத்தின் விலை 3 வெள்ளியிலிருந்து 8 வெள்ளிக்கு ஏகமாய் உயர்த்தப்பட்டு விட்டது.

வெண்டைக்காய் கிலோ 5 வெள்ளி, பீன்ஸ் காய் 8 வெள்ளி, புரோக்கோலி 10 வெள்ளி, கோலிபிளாவர் 8 வெள்ளி என விற்கப்படுகிறது.

சில்லி மேரா, சில்லி ஈஜாவ், சில்லி அப்பி என மூன்று வித மிளகாய்களும் கிலோ 9 வெள்ளி என ஆகாச விலைக்கு உயர்த்தப்பட்டு விட்டன.

சில்லி அப்பி மேரா மிளகாய் கிலோ 15 வெள்ளி வரையில் உயர்ந்து விட்டது.

என்.எஸ்.கே பேரங்காடியிலும் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட அனைத்து பொருட்களும் இரவோடு இரவாக புதிய விலைக்கு உயர்த்தப்பட்டு விட்டன.

போன வாரம் ஒரு பாக்கெட் கோழி இறைச்சி நாகெட்டின் விலை 8 வெள்ளி 90 காசுகளாக இருந்தது இப்போது 13 வெள்ளியாக மாற்றப்பட்டு விட்டது.

என்ன விலை போட்டாலும் பயனீட்டாளர்கள் வேறு வழியின்றி வாங்கிச் செல்கிறார்கள்.

கொரோனா கொடுமையைக் காட்டிலும் குரோனர்களாகச் செயல்பட்டு வரும் வியாபாரிகளை அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டிய அமலாக்க அதிகாரிகள் கும்பகர்ணத் துயிலில் இருப்பதாக பயனீட்டாளகள் தங்கள் வெறுப்பை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here