போபால்,ஏப்ரல் 13-
மத்திய பிரதேச மாநிலம் சாகர் எனும் மாவட்டதில் 25 வயது இளைஞர் ஒருவர் டிக் டாக்கில் முககவசம் அணிவதை கேலி செய்யும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் முககவசத்தை தூக்கி எறிந்து விட்டு கடவுள் மேல் நம்பிக்கை வையுங்கள் என்றும் கூறியிருந்தார். சமீபத்தில் அவர் காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கொரோனா பாதிப்பு அறிகுறிகள் இருந்ததால் அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தும் இடம் தொடர்பான வீடியோவை டிக்டாக்கில் பதிவேற்றம் செய்தார். மேலும் அவர் வெளியிட்ட வீடியோவில் முககவசம் அணிந்தவாறு எனக்காக கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆஸ்பத்திரி மருத்துவர்கள் அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர். அதில் மேலும் பல்வேறு வீடியோக்களை பதிவேற்றம் செய்ய வைத்திருந்ததையும் கண்டு பிடித்தனர்.
இந்நிலையில் அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனைகளின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.