
புதுடெல்லி,ஏப்ரல் 15-
உலக நாடுகளில் பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவிலும் தீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,076 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 377 பேர் பலியாகி உள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இதுபற்றி ஆய்வு மேற்கொண்டு ஆய்வறிக்கை ஒன்றை சமர்ப்பித்து உள்ளது. இதனடிப்படையில் 10 மாநிலங்களில் உள்ள 2 வகையான வவ்வால் இனங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
இதன் முடிவில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள வவ்வால் இனங்களில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா, தெலுங்கானா, குஜராத், ஒடிசா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் கொரோனா வைரஸ் இல்லை என தெரிய வந்துள்ளது.
இதனை தொடர்ந்து, மற்ற விலங்குகளிலும் கொரோனா பாதிப்பு குறித்த ஆய்வு நடத்தப்பட வேண்டும் என அந்த ஆய்வறிக்கை பரிந்துரைக்கிறது. இதற்கு முன்னதாக கேரளாவில் நிஃபா வைரஸ் தாக்கத்தின் போது வவ்வால்களில் வைரஸ் சோதனை மேற்கொள்ளப்பட்டது.