ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்தது ஏன்? பேஸ்புக் நிறுவனர் விளக்கம்

புதுடெல்லி,ஏப்ரல் 22-

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்தில் 43 ஆயிரத்து 500 கோடி ரூபாயை பேஸ்புக் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. இதற்காக ஜியோ நிறுவனத்தின் சுமார் 10 சதவிகித பங்குகள் பேஸ்புக்கிற்கு வழங்குகிறது. இதன் மூலம் ஜியோ நிறுவனத்தின் மதிப்பு 4.62 லட்சம் கோடி ரூபாயாக உயர உள்ளது.

கடன்களை குறைக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பேஸ்புக் முதலீட்டை ஜியோ ஏற்றுள்ளதாக கூறப்படுகிறது. கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களுடனும் ஜியோ, பேசி வந்த நிலையில் பேஸ்புக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. பேஸ்புக் நிறுவனத்தைப் பொறுத்த வரையிலும் இந்தியா போன்ற மிகப்பெரிய சந்தையில் தனது கரங்களை வலுப்படுத்த ஜியோ நிறுவனத்தை சிறந்த வாய்ப்பாக கருதுகிறது.

மேலும் துணை நிறுவனமாக வாட்ஸ் ஆப் மூலம் பணப்பரிமாற்ற வசதிகளை மேற்கொள்ள முயற்சித்து வரும் நிலையில் அதனை எளிமைப்படுத்தும் முயற்சிகளும் ஜியோவுடனான ஒப்பந்தத்தின் மூலம் சாத்தியப்பட உள்ளது.

இந்த நிலையில், இந்தியாவின் தொலைத்தொடர்புத்துறையில் ஜாம்பவானாக திகழும் ஜியோ நிறுவனத்தில் 9.9 சதவீத பங்குகளை வாங்கியது ஏன்? என பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் விளக்கம் அளித்துள்ளார். மார்க் சூகர்பெர்க் இது பற்றி கூறும் போது, “ மிகப்பெரிய டிஜிட்டல் மாற்றத்தின் மத்திய நிலையில் இந்தியா உள்ளது. எனவே, இந்திய மக்களுக்காக வர்த்தக வாய்ப்புகளை தொடங்குவதில் பேஸ்புக் நிறுவனம் உறுதியுடன் உள்ளது” என்றார்.

63.3 பில்லியன் சொத்து மதிப்பு கொண்ட உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான மார்க் சூகர்பெர்க், முகேஷ் அம்பானிக்கு நன்றி தெரிவித்துள்ளதோடு, பணியை தொடங்குவதற்கு ஆவலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here