கொரோனா தொற்று பயம் நாட்டை மட்டும் அல்ல, உலகையே உலுக்கிக்கொண்டிருக்கிறது என்பது அறிந்த செய்தி, இது பற்றித் தெரியாதவர்கள் புதுப்புது பெயர்களால் கொரோனாவை அழைக்கத் தொடங்யிருக்கின்றனர்.
சில பெயர்கள் நகைச்சுவையானது, சில பெயர்கள் வேடிக்கையானது. சிலர் வெறுப்போடே பெயர்கள் வைத்தும் அழைக்கின்றனர். சிலர் குருமா என்கின்றனர். சிலர் கர்மா என்கிறார்கள். எது எப்படியாயினும் அதன் பொருள் கொரோனா அல்லது கோவிட் -19 என்பது மட்டும் அவர்களுக்குத் தெரிகிறது. அப்படியென்றால் அசட்டுத்தனத்திலிருந்து ஒரு படி முன்னேறியிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
மக்களுக்கு கொரோனா என்பது புது அனுபவம். இதற்கு முன்னதாக டிங்கி மட்டுமே அதிகமாகப் பேசப்பட்டிருக்கிறது. அதற்கு முன்னிருந்தவைகளெல்லாம் வந்துபோன எதிரிகள் கணக்கில் மட்டுமே இருக்கின்றன.
கொரோனா பேசப்பட்ட காலத்தில் அதன் வேகம் பற்றி பெரும்பான்மையினர் அறிந்திருக்க வில்லை. அதாவது கடந்த பிப்ரவரி மாதத்தில் அதன் கொலைத்தன்மை எத்தனை கொடூரமானது என்பதை அறிய சில நாட்கள் ஆனது. இதன் கோடூரத்தைப் பாமரர்கள் அறிய பல நாட்கள் ஆனது. இன்னும் சிலருக்கு அதன் வீரியம் சரியாகப் புரியவில்லை. அதனால்தான் கோரோனாவின் பெயர் பல ஒலிவடிவங்களில் ஒலித்தன. ஒலிக்கின்றன.
கொரோனா பற்றி முழுமையாகத் தெரிந்திருந்தால் கோவிட்-19 தொற்றின் பெயரைச் சரியாக உச்சரித்திருப்பார்கள். ஆனால், தெரிந்திருக்கிறதா? அரிந்திருக்கின்றனரா? யாருக்கும் உண்மை தெரியவில்லை!
இவர்களில், ஏதும் தெரியாதவர்களாக ஒருவகையினர் உண்டு. இவர்கள் இன்னும் தெருவில் சுற்றித்திரிகின்றவர்கள். இவர்களுக்கு தெரிகின்ற வகையில் ஒரு பெயர் சொல்லலாம். நாடோடிகள் என்று சொல்லலாமா? இது சரியானதா என்ற ஆய்வை விட்டுவிடுவோம். , இவர்களின் நிலைப்பாடு என்ன என்பதுதான் இன்றைய பிரச்சினை.
கொரோனாவின் தீவிரம் அதிகமானதைத் தொடர்ந்து கோலாலம்பூர் வட்டாரத்தில் திரிந்தவர்களைச் சுற்றி வளைத்து ஓரிடத்தில் அமர்த்தியிருக்கிறார்கள். கோலாலம்பூர் வட்டாரம் தவிர்த்து பிற இடங்களில் இப்படிச் செய்யப்படவில்லை என்பதாகவே அறியப்படுகிறது.
இவர்களிடமிருந்து கொரோனா பரவாதா? என்றும் கேட்கிறார்கள். இவர்கள் சிற்றூர்களில் மன நிலை பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். கடைத்தெருக்களில் உறங்குகின்றார்கள். உணவுக்கும் வழியில்லை. கடைகளும் இல்லை. இவர்களை எப்படி அணுகுவது?
மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு கோரோனா அல்லது கோவிட்-19 தொற்று பற்றினால் அவர்களுக்கான வழிமுறை என்ன? இவர்களுக்கான இடம் எது?