கொரோனா எதிரொலி – முகாம்களில் இருந்து 4 லட்சம் அகதிகள் வெளியேற தடை

தாதாப் அகதிகள் முகாம்

நைரோபி:

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் சோமாலியா, தெற்கு சூடான் எத்தியோப்பியா ஆகிய நாடுகளிலிருந்து கடந்த 20 ஆண்டுகளில் வந்த 4 லட்சத்துக்கும் மேற்பட்ட அகதிகள் இரண்டு பெரிய முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதில், கிழக்கு கென்யாவில் உள்ள தாதாப் முகாமில் 2 லட்சத்து 17 ஆயிரம் பேரும், வட மேற்கு கென்யாவில் உள்ள காகுமா முகாமில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் அகதிகளும் உள்ளனர்.

இந்தநிலையில் கென்யா நாட்டில் கொரோனா தொற்று மெல்ல மெல்ல பரவி வருகிறது. இதுவரை 390க்கும் மேற்பட்டோர் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் அகதிகள் உள்ள இரு முகாம்களிலும் இதுவரை யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் இரண்டாயிரம் அகதிகளை மட்டுமே தனிமைப்படுத்தி வைக்க முடியும். 110 பேருக்கு மட்டுமே அவசர சிகிச்சை பிரிவுகளில் படுக்கை வசதிகள் உள்ளன. இதனால் இந்த முகாம்களில் உள்ள 4 லட்சத்து 7 ஆயிரம் அகதிகளும் தங்களது வசிப்பிடத்தில் இருந்து வெளியேறக் கூடாது என்று கென்ய உள்துறை மந்திரி பிரெட் மடியாங்கி உத்தரவிட்டுள்ளார்.

கென்யாவில், கடந்த 22-ந் தேதி முதல் 3 வார பகுதி நேர ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பது, குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here