இருவிழிகளில் ஒன்று சுகாதாரம்

மே 4 – மலேசியா தனது பொருளாதாரத்தை மறுதொடக்கம் செய்யும் நடவடிக்கையில் இன்று தொடங்கி நடமாட்ட நிபந்தனைக்கு ஏற்ப (சிஎம்சிஓ) மாறியிருக்கிறது . இம்மாற்றத்தை 5 லட்சம் பேர் விரும்பவில்லை என்றும் ஒரு செய்தி இருக்கிறது.

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது என்ற ஆய்வில் மாற்று நடவடிக்கையாக இது அமைகிறது என்பது நியாயமான கருத்தாக இருக்கும் இவ்வேளையில், இதன் உண்மையான காரணமான கோவிட் தடுப்பு நடவடிக்கை பாதிக்கப்படும் என்ற கவலையும் பல லட்சம் பேர்களிடம் இருக்கிறது.

கோரொனா பாதிப்பால் மார்ச் மாத மையத்திலிருந்து அரசாங்கத்திற்கு 2.4 கோடி இழப்பு ஏற்படுகிறது என்ற கணிப்பில், இம்மாற்றம் அவசியமானது என்கிறது அரசாங்கம்.

மூன்று நாட்களுக்கு முன்பு பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் அறிவித்ததைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட அனைத்து பொருளாதாரத் துறைகளும் வணிகங்களும் கடுமையான நிபந்தனைகளுக்கு உட்பட்டு இன்று முதல் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டிருக்கின்றன.

மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி ஆணை (எம்.சி.ஓ) மே 12-ஆம் தேதி ஒரு மாற்று அறிவிப்புக்குத் திட்டமிடப்பட்டிருந்தது. இன்று நடப்புக்கு வந்த இந்த அறிவிப்பாகக்கூட மே 12ஆம்நாள் அறிவிப்பு இருந்திருக்கலாம். முடிவுக்கு ஒரு வாரத்திற்கு சற்று முன்னதாக இது நடப்புக்கு வந்துவிட்டது.

இதில், இரண்டு செய்திகள் முக்கியமானவை. ஒன்று சுகாதாரம், மற்றொன்று பொருளாதாரம். இரண்டும் இரு விழிகள் போன்றவை. இதில் எதையும் இழக்கமுடியாது. அப்படியானால் இரண்டையும் கப்பாற்றித்தான் ஆகவேண்டும். அதற்கான வழிதான் இன்றைய மாற்றுத்திட்டம்.

மலேசிய அர்சாங்கத்தின் இருவழிக்கொள்கையை சிலர் ஆதிரிப்பதில்லை. ஒரே நாட்டில் மாநிலங்கள் திட்டங்களை மாற்றியமைத்துக்கொள்ளலாம் என்பதும் சரியானதல்ல. ஒரே நாட்டில் வெவ்வேறு மக்களாக மக்கள் வாழவில்லை. மொழி, தொழில் மலேசியக்கலாச்சாரம் எல்லாம் ஒன்றுதான். நாட்டின் மாநில எல்லைகள் பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரமாகவும் இல்லை. அப்படியென்றால் ஏன் தனித்தனி மாற்றங்கள் என்பதுதான் பலரின் கேள்வியாக இருக்கிறது.

மக்களின் சுகாதாரத்தைப் பார்க்கும்போது பொருளாதாரம் இரண்டாம் நிலையில்தான் இருக்கிறது. கொரோனா பாதிப்பிலிருந்து மலேசியர்கள் இன்னும் விடபடவில்லை. இறப்பு விகிதம் கூடிக்கொண்டே இருக்கிறது . இன்றைய நிலையில் 122 ஆக இறப்பு இருக்கிறது. பாதிப்பில் 6298 ஆக இருக்கிறது. இப்படி இருக்கையில் ஏறுமுகம்தான் தெரிகிறது. இந்த நிலையில் நிபந்தனைத் தளர்வுகள் நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடும் என்கிறார்கள்.

மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி ஆணையின் தளர்வால், வணிகங்கள் இயங்க அனுமதிக்கப்படலாம், இருப்பினும் முதலாளிகள் நெகிழ்வான வேலை நேரங்களை செயல்படுத்த வேண்டும். தொழிலாலர்களை வீட்டிலிருந்தே வேலை செய்வதை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அரசாங்கம் கோரியுள்ளது.

பள்ளிகள், தினப்பராமரிப்பு நிலையங்கள் திறக்க அனுமதி இல்லை என்பதால், குழந்தைகளுடன் இருப்பவர்கள் திட்டமிடப்பட்ட மாற்று நாட்களில் அலுவலகத்திற்கு வர அனுமதிக்கும் ஆலோசனைகளையும் முதலாளிகள் கடைப்பிடிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல், கோல்ஃப் போன்ற உடல் தொடர்புகளை ஈடுபடுத்தாத வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகள் இப்போது அனுமதிக்கப்படுகின்றன.
இருப்பினும், பொதுமக்களுக்கான சமூக, கலாச்சார ,மத, சமய, வழிப்பாட்டுக் கூட்டங்கள் இன்னும் தடைசெய்யப்பட்டுள்ளன.

வேலை நோக்கங்களுக்காகவும், முன்னர் வேறு இடங்களில் சிக்கித் தவித்தவர்களுக்கும் வீடு திரும்புவதற்கு மட்டுமே மாநிலங்களுக்கு இடையேயான பயணம் அனுமதிக்கப்படுகிறது.

அனைத்து மலேசியர்களும் இப்போது முகமூடி அணியவும், வெளியே செல்லும் போதும் கை சுத்தம் செய்யும் திரவத்தை எடுத்துச் செல்லவும் வலியுறுத்தப்படுகிறார்கள்.

இவற்றை முறையாகக் கடைப்பிடிக்க முடியாவிட்டால் பழைய நிலமைக்கு மாறும் சூழல் ஏற்படவும் கூடும் என்றாலும் மக்கள் எந்த அளவு தங்கள் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் எனபதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். சுகாதரம் மக்களிடம் உருவாகவேண்டும். இல்லையெனில் பலி நமக்கானதாகிவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here