கொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றி – சீனாவுக்கு, கிம் ஜாங் அன் பாராட்டு

பீஜிங்,மே 09-

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உயிர் பலி வாங்கி வருகிறது.

உலகளவில் வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. பலி எண்ணிக்கை விரைவில் 3 லட்சத்தை எட்டும் நிலையில் உள்ளது.

அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி உள்ளிட்ட பல நாடுகள் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி திணறி வரும் நிலையில் கொரோனா வைரஸ் பரவலின் மையமாக இருந்த சீனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் சீனா வெற்றி பெற்றுள்ளதாக கூறி அதிபர் ஜின்பிங்குக்கு, வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜின்பிங்குக்கு, கிம் தனிப்பட்ட முறையில் வாழ்த்து செய்தி அனுப்பியதாக வடகொரியாவின் அரசு செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ. தெரிவித்துள்ளது.

இது பற்றி கே.சி.என்.ஏ. வெளியிட்ட செய்தியில், “கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற சீனாவுக்கு வடகொரிய தலைவர் கிம் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் கிம்மின் உடல் நலம் குறித்து சீன அதிபர் ஜின்பிங் விசாரித்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கிம், எப்போது ஜின்பிங்குக்கு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பினார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

கொரோனா வைரசை சீனா வேண்டுமென்றே பரப்பி விட்டதாகவும், உகான் நகரில் உள்ள ஒரு ஆய்வகத்தில் இந்த வைரஸ் உருவாக்கப்பட்டதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் சீனாவுக்கு பாராட்டு தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

வர்த்தக ரீதியிலும், நட்பு ரீதியிலும் வடகொரியாவுக்கு சீனா மிகவும் நெருக்கமான நாடு என்பதும், தற்போது வரை வடகொரியாவில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here