அடுத்த பிறவிக்கு ஆசீர்வாதம்

இன்று அன்னையர் தினம். ஆனால், கொண்டாட்ட தினமாக இருக்காது. இருக்கவும் கூடாது, கொண்டாட்ட தினமாக இருந்தால், அதனால் நன்மை இருக்காது. தீமைதான் விளையும். இது மாறுப்பட்ட சிந்தனையை ஏற்படுத்தியிருக்கிறது. அன்னையைப் போற்றுகின்ற நாளாக, புதிய மாற்றங்களுடன் அமைந்திருக்கிறது.

இதுவரை அன்னையர் தினத்தை கொண்டாடிவந்த மலேசியர்கள், சற்று மாறுபட்ட அன்னையர் தினத்தை உணர்கின்றனர். புதிதாய் சிந்திக்க பூத்ததிந்த புனித நாளாக எண்ணுகின்றனர்.

நாட்டின் நிலைமை மாறுபட்டிருக்கிறது. மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி ஆணையை மதித்தொழுக வேண்டிய அவசியம் இருக்கிறது. இது காலத்தின் கட்டாயம். சட்டம் தனி மனிதருக்கானதோ, அல்லது ஒரு குறிப்பிட்ட குடும்பத்துக்கானதோ அல்ல. நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கானது. அது அனைவருக்குமானது, நமக்கும் பொருந்தும்.

ஒரு நோயைவிட, தொற்று நோய் கொடுமையானது. இதைச் வலியுறுத்திச் சொல்லும்போது யாருக்கும் ஒரு பொருட்டாக இருக்காது.  அனுபவிக்கும்போதுதான் தொற்று நோயின் வலிமை புரியும். தொற்றின்போது வலிமை உள்ளவர்களே எதிர்த்து நிற்கின்றனர். அவர்கள் மீள்கின்றனர். மனவலிமைக் குன்றியவர்கள் பெரிதாய் பாதிக்கப்படுகின்றனர்.

அன்னையர்கள் பெரும்பான்மையினர் வயது முதிர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள். இவர்கள் மன வலிமை கொண்டவர்களாக இல்லாவிட்டால் பாதிப்பு ஏற்படக் கூடுதல் வாய்ப்புண்டு. அதனால், சமூக இடைவெளிக்கு மதிப்பளிக்க வேண்டிய அவசியத்தைப் பிள்ளைகள் உணரவேண்டும்.

அன்னை என்பவள் ஒருத்தியாக பிள்ளைகள் பலராகவும் இருப்பார்கள். அன்னை என்பவள் அன்னை என்பது மட்டுமே. அன்னைக்கு பிள்ளைகள் மூலமே பல உறவுகள் ஏற்படுகின்றன. அந்த உறவுகளால் அத்தை என்றும் பாட்டி என்றும். சித்தி என்றும் அண்ணி  என்றும் உறவுகள் முளைப்பதுண்டு, ஆனாலும், அன்னையிலிருந்துதான் உறவின் தொடர்ச்சி கிளைகளாக மாறுகின்றன.

அன்னை என்பவள் மூலதெய்வம். அதன் பிம்பங்கள் மாறலாம். உறவுகள் கிளைக்கலாம். எல்லாம் அன்னை என்ற மூலத்திலிருந்துதான் பிறக்கின்றன. அதனால்தான் தெய்வம் என்கிறார்கள். வீட்டுக்கொரு தெய்வத்தை இறைவன் உருவாக்கியிருக்கிறான். அந்த தெய்வம் துன்பத்தில் இருந்தால் தோன்றல்களும் துன்பத்தில்தான் இருக்கும்.

தெய்வத்திற்கு யாரேனும் துன்பம் தருவார்களா? அப்படித் தந்தால் அவர்கள் பிள்ளைகளாக இருக்க மாட்டாரகள் . பெருந்தொல்லைகளாகத்தான் இருப்பார்கள். அன்னையை வெவ்வேறு நாமங்களில் குறிப்பிடுவதுபோலவே இறை என்பது ஒன்றுதான். வடிவங்கள் மட்டுமே வேறுபடுகின்றன. வடிவங்கள் வேறாக இருக்கலாம். அதன் பேர் தெய்வம். அந்த தெய்வம் அன்னையாக இருக்கிறது.

அந்த அன்னைக்காக ஒருநாள் போதுமா?  இந்த நாள், ஒரு தொடக்கமாகும். அன்னை பற்றி உணர்த்தும் நாள். இந்நாள், தொடர்ச்சியாக ஒவ்வொருநாளும் கொண்டாடப்படவேண்டும் என்றால் பிள்ளைகளுக்கு நிறைய பொறுப்புகள் இருக்கின்றன. அவற்றை நிறைவுறச் செய்தாலே போதும், பிள்ளைகளின் குடும்பம் சீரும் சிறப்புமாய்ச் செழிக்கும்.

தெய்வத்தின் முன்  கைகூப்பி வணங்குவதும் விழுந்து வணங்குகின்றவர்களும் உண்டு, அன்னையின் காலடி வணங்குவது சிலரின் பழக்கம் மட்டுமாகவே இருக்கிறது. கடமைகள் செய்ய மறுப்பதை தெய்வகுற்றம் என்கிறார்கள். அன்னைக்குச் செய்ய வேண்டியதைச் செய்யாமல் இருந்தால் அதற்குப் பெயர் என்ன? மிகப்பெரிய குற்றமாகும். அரசாங்கமும் பெற்றோரைக் கைவிடும் பிள்ளைகளைத் தண்டிக்கிறது.

கோரோனா அல்லது கோவிட் -19 என்ற தொற்று தீமை செய்வது. அன்னைக்குரியவற்றைத் தவறாமல் செய்வதும் ஒருவகையில் தொற்றுதான். இந்தத்தொற்று நன்மைக்கானது. இதன் மற்றொரு பெயர் பற்று என்பதாகும்.

அன்னைக்குரியவற்றை அவ்வப்போது செய்வதல்ல. எப்போதாவது செய்வதுமல்ல. அன்றாடம் செய்வது . அது கடமையாக  இருக்கும் வீடு செல்வங்கள் 16 உம் நிறைந்த வீடாக விளங்கும்.

வாழும் போதே வரலாறு செய்வதுதானே சிறந்தது. வாழும் காலம்வரை அன்னையரை வணங்குவீர்! அடுத்த பிறவி வரை அது ஆசீர்வதிப்பாகவே இருக்கும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here