காப்பகம் என்பதும் பொய், காப்பாற்றுங்கள் என்பதே மெய்

காப்பகம் என்று சொன்னதுமே சிறுவர் காப்பகம், முதியோர் காப்பகம், கைவிடப்பட்டவர்களுக்கான காப்பகம் , மகளிர்க் காப்பகங்கள் என்பதாகத்தான் நினைக்கத் தோன்றுகிறது. காப்பக வரிசையில் பிற காப்பகங்கள் பற்றிய நினைவுகள் சட்டென்று ஞாபகம் வருவதேயில்லை. அங்கு நடக்கும் ஊழல்கள் ஊழல்துறை தூண்டிலில் ஒருநாள் சிக்கிவிடும்.

நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஆசிரமங்கள், காப்பகங்கள் முளைவிட்டிருக்கின்றன. இதற்கு நல்ல மனமும். நல்ல எண்ணமும் காரணமாக இருக்கிறது என்று, ஒட்டுமொத்த உண்மையாக ஒத்துக்கொள்ளவே முடியாது.

காப்பகம் வெற்றிகரமாகச் செயல்படுகிறது என்பது முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கப் படுகிறது என்பதே அர்த்தமாக இருக்கிறது. காப்பகங்களை நடத்துகின்றவர்கள் பலர் கீழ்த்தரமான எண்ணங்கள் கொண்டவர்களாக இருப்பதும் உண்டு. கீழ்த்தரமாக நடத்துவதும் உண்டு. இது சினிமா கதையல்ல. இதை வெளியே கூறுகின்றவர்கள் சாணக்கியமாக, உயர்மட்ட பிரமுகர்களால்  மிரட்டப்படுகின்றனர் என்பதும் ஒரு தொடர்கதையாகவே இருந்து வருகிறது. உயர்மட்டங்களின் போதைக்கும் காப்பகம் நம்பகமான இடமாக இருக்கின்றன.அதற்காகவே நடத்தப்படுகிறது போலவும் இருக்கின்றன.

சில காப்பகங்களில் பாதுகாப்பு கருதி விடப்படுகின்ற இளம்பெண்கள் வெளிநபர்களுக்குச் சுகபேரம் பேசப்பட்ட செய்திகளும் காதில் விழாமல் இல்லை. சில பெண்கள் அங்கிருந்து தப்பி ஓடியிருக்கின்ற செய்திகளும் ஊடகங்களில் வந்திருக்கின்றன. படித்தறிந்து, விசாரித்தவர்கள் அதிகம். அவர்களும் மிரட்டப்பட்டிருக்கின்றனர். மிரட்டபட்டனர் என்பதும் உண்மை.

ஊடகங்களும் மிரட்டப்பட்டிருக்கின்றன. இப்படியெல்லாம் நடப்பதற்கு எது காரணங்களாக இருக்கின்றன. பணம், பலவீனங்களை மறைக்க நம்பகமான இடம். அதுதான் காப்பகம். சில காப்பகங்கள் நம்பிக்கையானவை என்பதிலும் மாற்றுக்கருத்துகள் இல்லை.

காப்பகம் என்பது வசதியற்ற. பேற்றோர்களை இழந்த. முதிர்ந்தவர்களைக் காக்கின்ற இடங்கள் என்பதாகத்தான் அனைவரின் பார்வையும் இருக்கிறது. அந்தப்பார்வைக்குப் பின்னால் போர்த்தப்பட்ட அசிங்கங்கள் பல அரங்கேறுகின்றன என்பதும் சிலருக்கு மட்டுமே தெரிந்த வெளிச்சம்.

நாட்டில் நம்பகமான ஆசிரமங்கள், காப்பகங்கள் இல்லையா? என்பதும் புரிகிறது. இல்லை என்று ஒட்டுமொத்தமாய் பழிபோடவும் விரும்பவில்லை. காப்பகம் நடத்துவது மிகச்சிரமம் என்பவர்களும் இருக்கிறார்கள். அப்படியென்றால் சிரமத்தை ஏன் கட்டி அழ முன்வருகிறார்கள், ஏன் காப்பகம் நடத்த வேண்டும் என்ற கேள்விக்கும் பதில் வேண்டுமல்லவா?

காப்பகங்கள் கேடயமாக, பல துர்நாற்ற வேலைகளுக்குப் பின்புலமாக விளங்குகின்றன. அதில் பணிபுரிகின்ற பணியாளர்கள் கைக்கூலிகளாகவே நடத்துநர்களுக்கு ஒத்து ஊதுகின்றனர் என்பது செய்தியல்ல. அப்பட்டமான மறைக்கப்படும் உண்மைகள்.

அந்தந்த வட்டார அரசு சமூகநலப்பிரிவு அதிகாரிகளில் சிலர் வந்தோம், அறிந்தோம், வயிறு முட்டத் தின்றோம், சென்றோம் என்றுதான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்களாம். அசிங்கங்கள் என்று சொல்வதற்கு எந்த ஆதாரமும் கிடையாது என்று குறிப்பேட்டில் பதிவு செய்வார்களாம்.

காப்பகத்தில் விடப்படும் இளம்பெண்ணுக்கு காதலே வரக்கூடாதாம். அப்படியே வந்துவிட்டால் காப்பக மீறல் என்று கடுமையான தண்டனை வழங்கபடுகிறது. இத்தண்டனையை வழங்குகின்றவர்கள் கைக்கூலிகளாக இருக்கின்றவர்கள். காப்பக வேலை நேரம் 16 மணி நேரம் பணிவிடையாக மாறும். இந்த நேரத்தில். முதலாளிகளுக்கும் பிரமுகர்களுக்கும் கைகால் நீவிவிடுவது, பிடித்துவிடுவதும் அடங்கும்.

அடையாளப் பத்திரங்கள் இல்லதவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பல ஆண்டுகள் கடந்தும் அதற்கான முயற்சிகள் எடுக்கப்படுவதில்லை. இதை காரணம் காட்டியே காப்பகத்தில் அடிமைகளாக நடத்தப்படுவார்கள். அதனால் அச்சுறுத்தப்படும் பெண்கள் அடங்கிப் போகின்றனராம்.

இதிலிருந்து தப்பிச் சென்றவர்களைத் தேடிப்பிடித்து, பயமுறுத்தி, அவர்களே மாற்றுச்செய்தி கொடுப்பதுபோல் ஒரு செய்தியும் வந்துவிடும். அப்போதுமுதல் அந்தக் காப்பகம் புனிதமாகிவிடும். களங்கம் என்பது பொய்யான திரித்தல் என்று ஜம்பம் பேசுவார்கள்.

இன்னொரு காப்பகச் செய்தியும் அபாரமானதாகச் செயல்பட்டதை பலர் கூறியிருக்கின்றனர். முதியோர் காப்பகம் ஒன்றின் உரிமையாளர் ஒரு பெண்.  இக்காப்பக வாகனத்தையும் காப்பகத்தில் இருப்போரின் ஆல்பத்தையும் பயன்படுத்தி நாடுமுழுவதும் சென்று வசூல் வேட்டை நடத்திய செய்தியும் பத்திரிகையில் வந்தது. வசூல் செய்தவரும் உதவியாக இருந்த ஒரு பெண்மணிதான். வசூல் பெண்மணிக்கு உதவியாக இருந்தவர்கள் சுற்றிதிரிந்த இளசுகள் சிலர். அவர்கள் பிறப்புப்பத்திரம் இல்லாதவர்கள்.

வசூல் வருமானத்தில், இரவில் பார் குதூகலம் நடக்கும். அப்பெண்ணின் கையில் இருந்ததில் பாதி போலி ரசீதுகள். இதுபற்றிப் போலீஸ் புகார் செய்தவர் காப்பக நடத்துநர். பத்திரிகைச் செய்தி கொடுத்தவரும் காப்பக உரிமையாளரே. இதன் கதை இன்னும் அதிகம்.

ஆனாலும், எந்தப் புகாரும் எடுபடுவதில்லை. அப்படியானால், தவறு எங்கே உற்பத்தியாகிறது? அரசு அதிகாரிகள் பேரம் பேசப்படுவதாக கிகிசுப்புகளும் உண்டு.

இதற்கெல்லாம் ஒரே பதில்தான் இருக்கிறது. சமூக நலத்துறை அதிகாரிகள் விலைபோகாமால் இருக்க, ஊழல் துறை உண்மையாகவும் நேர்மையாகவும் சமூகநலத்துறை மீது கழுக்குக்கண் பார்வையைச் செலுத்துவதுதான். இதைவிட மிகச்சிறந்த ஆலோசனை ஒன்றும் உள்ளது. அனைத்து காப்பகங்களையும் ஒன்றிணைத்து,  மாநில அரசாங்கத்தின் நேரடிப்பார்வையில்  வழிநடத்துவதுதான். இதுதான் மிகச்சிறந்த வழி. செய்யுமா மாநில அரசு.

பெரும்பான்மை காப்பகங்களின் குருட்டு நாடகங்கள்    இருட்டில்தான் அரங்கேறுகின்றன என்பதை அறிந்தவர்கள் கூறவே அஞ்சுகிறார்கள். ஏனெனில், அவர்களின் குடும்பம், குடும்பத்தினர் மிரட்டப்படும் அச்சத்தினால். உள்ளூர் கேடிகளின் கூடாரமும் காப்பகமாக இருப்பதால். அதனால் பலர் வாய்மூடிக் கிடக்கின்றனர்.

கோரோனாவின் மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி ஆணை கூட காப்பகத்தாரைக் மிகுதியாகவே காப்பாற்றிவருகிறது. காப்பகத்தில் இருப்போரைக் காப்பாற்ற புதிய வியூகம் தேவைப்படுகிறது. சமூக நலத்துறை இவர்களை தனியே அழைத்துச்சென்று விசாரித்தால் பல உண்மைகள் வெளிப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here