அரசாங்கம் உதவி கோரியபோது நாங்கள் உதவினோம் – எங்களுக்கு உதவ யாரும் முன்வரவில்லை – ஏ.கே.செல்வன் வேதனை

கோலாலம்பூர்: நிபந்தனையுடன் கூடிய உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகும் முடிதிருத்தும் கடைகள் மீண்டும் செயல்பட அரசாங்கம் அனுமதி அளிக்காதது குறித்து மலேசிய சிகையலங்கார உரிமையாளர்கள் சங்கத் தலைவர் (மகாஸ்) ஏ.கே.செல்வன் வேதனை தெரிவித்தார்.

நாட்டின் நன்மைக்காக மக்களும் மக்களின் நன்மைக்காக நாடும் ஒன்றிணைந்தால் நாடும் அந்நாட்டு மக்களும் சுபிட்சமான வாழ்க்கையை வாழ முடியும்.  நாடு கடனில் இருப்பதாகவும் அதற்காக பொதுமக்கள் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டபோது நாங்கள் 5,000 வெள்ளி நிதியை தபோங் ஹாரப்பான்  நிதிக்கு வழங்கினோம்.

ஆனால் இன்று நாங்கள் 60 நாட்களுக்கு மேலாக வருமானமின்றி மிகவும் சிரமத்தை எதிர்நோக்குகின்றோம். எங்களுக்கு அரசாங்கம் உதவி வழங்க வேண்டும் என்று  சங்க உறுப்பினர்கள் சார்பாக வேண்டுகோள் விடுத்தார்.

நாங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகிறோம். இதே நிலை நீட்டித்தால் தொடர்ந்து தொழிலை நடத்த முடியாமல் போகும்.  நாங்கள் பெரியளவில்  வருமானம் பெற கூடிய தொழிலை செய்யவில்லை. மேலும் எங்கள் தொழிலை நடத்த நிச்சயம் அந்நியத் தொழிலாளர்கள் தேவை.  தற்போதைய மக்கள் நடமாட்டக் கட்டுபாட்டு உத்தரவு காலத்தில் அவர்களின் தங்குமிடம், உணவு, சம்பளம் ஆகியவற்றுடன் கடை வாடகை ஆகியவை நாளுக்கு நாள் அதிக சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.

அரசாங்கம் மற்ற துறைகளுக்கு எவ்வாறு கட்டுபாட்டுடன் தொழில் நடத்தலாம் என்று அனுமதி வழங்கியிருக்கிறதோ அதே போல் எங்களின் தொழில் தொடங்கவும் அனுமதி அளிக்க வேண்டும்

மேலும் வருமானம் இல்லாமல் பலர் வட்டி முதலைகளிடம் தங்கள் தேவையை சமாளிக்க கடன் வாங்குகின்றனர்.  இது மிகப்பெரிய ஆபத்தின் ஆரம்ப கட்டமாகும் என்றும் ஏ.கே.செல்வன் தெரிவித்தார்.  மகாஸ்  உறுப்பினர்களுக்கு மட்டுமல்லாமல்  முடிதிருத்தும் கடை வைத்திருக்கும் அனைவருக்கும் அரசாங்கத்தின் சிறப்பு நிதி கேட்டு ஒரு மனுவை தயாரித்திருக்கிறோம். நிதியுதவி தேவைப்படுவோர் https://forms.gle/sCQtYdDQ4LHdHWYW6 இதன் இணையத்தள வழி அறியலாம். மேல் விவரங்களுக்கு 016-6261287 (முகிலன்).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here