ஜோகூர், மே 15 – அரசியல் வைரஸ் கொரோனாவை விட மிக ஆபத்தானது. இதைச் சராசரி மனிதன் சொல்வதைவிட, தகுதி வாய்ந்த மனிதர் சொன்னால் அது முக்கிய செய்தி. இதைத்தான் ஒரு வார்த்தை வெல்லும் ஒரு வார்த்தை கொல்லும் என்பார்கள்.
இந்தச் செய்தியைச் சொன்னவர் மாண்புக்குரிய ஜோகூர் மாநில ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம் என்றால், அவரின் கோபம் என்னவாக இருக்கும் என்பதை நிதானித்தால் புரியும்.
அரசு, ஆட்சி இவ்விரண்டும் மக்களோடு பிணைந்திருக்க வேண்டும். ஆட்சி என்றாலே மக்கள் என்பதாகவே இருக்கும். இருக்கவும் வேண்டும். மக்கள் இல்லாமல் அரசியல் வாதிகளால் ஒன்றும் ஆவதுமில்லை. இது, அனைவருக்கும் தெரியும்.
அப்படியிருந்தும் தங்கள் சுய நலத்திற்காக அரசியல் சூழ்ச்சிகளும் விதண்டா வாதங்களும் நடந்தால் மக்களுக்கு நன்மை தருவதாக அமையாது. இந்த கருத்தத்தைத்தான் சுல்தான் இப்ராஹிம் சாடியிருக்கிறார்.
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா – என்ற பாடல் இருக்கிறது. குறுக்கு வழி என்பது நடைப்பாதைக்குப் பொருத்தமாக இருக்கலாம். அதே குறுக்கு வழி அரசியலுக்குப் பொருத்தாமாக இருக்காது. குறுக்குவழி அரசியலுக்கு எக்காலத்தும் நன்மையாக அமையாது.
சுயநல அரசியல் வாதிகளால் ஆதாயம் இருக்கலாம். மக்களின் வெறுப்பைத்தான் சம்பாதிக்க வேண்டிவரும் என்ற அர்த்தம் பொருந்திய எண்ணத்தை, சுல்தான் வலியுறுத்தியிருக்கிறார்.
அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு வெறுப்பு எற்படும் அளவுக்கு பிரிவினைப் பேச்சுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அரசியல் வாதிகளுக்கு இது அரோக்கியமானதல்ல. நாட்டின் ஒட்டுமொத்த அரசியலையும் கரையான்கள் போல் பிரிவினைவாதம் கெடுத்துவிடும் என்று அவர் எச்சரித்திருக்கிறார்.
மக்கள் மீது அக்கறையில்லாத எவரும் நிலைத்திருக்க முடியாது. மக்கள் அவர்களை அடையாளம் கண்டு எறிந்துவிடுவார்கள். அதனால், அரசியல் என்பது மக்களின் நன்மைக்கானதாக இருக்க வேண்டுமே யன்றி மக்களுக்கு எதிரான வைரஸ் ஆகிவிடக்கூடாது என்பதுதான் அவரின் ஜோகூர் ஆளுநரின் அழுத்தமான செய்தியாகும்.
இதைக் கேட்பதோடு, பின்பற்றினால் நிலையான அரசியல் சுகாதாரம் ஆதாயமாகிவிடும். மக்களுக்காக ஒன்றுபடுங்கள் என்பதில் கரிசனம் இருக்கிறது.