பள்ளிகளோடு ஐக்கியமானவர்கள் பள்ளிப்பேருந்து ஓட்டுநர்கள். அவர்களின் பொறுப்பு மிகப்பெரியது என்பதை பலர் புரிந்துகொள்ளவில்லை. புரிந்துகொள்ள முயற்சிப்பதும் இல்லை.பேருந்து ஓட்டுநர்கள் பள்ளிக் குழந்தைகளின் முதல் காவலர் என்ற மதிப்புக்குரியவர் என்பதால், ஓர் ஆசிரியருக்கு உள்ள மரியாதை அவருக்கும் உண்டு.
பொதுவாகவே வீட்டிலிருந்து பள்ளிமாணவர்களை அழைத்துக்கொண்டு பள்ளிவரும் வரும்வரை அவர்தான் முதல் ஆசிரியர். அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன. அவர்தான் முதல் ஆசிரியர் என்பதால், சாலை விதிகளைக்கூட அவரிடமிருந்து மாணவர்கள் கற்றுக்கொள்ளலாம். அதுமட்டுமல்ல, ஒழுக்கம் என்பதன் முதல் ஆசிரியர் அவர்தான்.
பொதுவாகவே நற்பண்புகள் கொண்ட மனிதராக இருக்க வேண்டிய பொறுப்பு பேருந்து ஓட்டுநருக்கு இருக்க வேண்டும் என்பதுதான் மிக முக்கியமான செய்தி. குடிப்பழக்கம் இல்லாமல் இருந்தால் அவர் முன்பு சொன்ன ஆசிரியர் தகுதிக்குப் பொருத்தமானவர் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
மாணவர்களைப் பத்திரமாக அழைத்துக்கொண்டு வருவதுமுதல், பள்ளி முடிந்து பாதுகாப்பாக வீடு கொண்டு சேர்க்கும் வரை பொறுப்புள்ள மனிதராக இருப்பவரும் அவர்தான். அதனால், குழந்தைகளின் தத்துத்தந்தை என்பவரும் அவர்தான்.
ஒருவேளை, பிள்ளைகளுக்கு ஏதேனும் நேர்ந்தால், குறிப்பாக விழுதல். சிறு காயங்கள் படுதல், மயக்கம், வாந்தி, பசி மயக்கமாகக் கூட இருக்கலாம். முதல் சகிச்சக்காக இவற்றைக் கையாளும் மனம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். தேவை என்று கருத்தினால் எது முதலில் என்று நிதானிக்கவேண்டும் .உடனே மருத்துவமனை, கிளினிக் கொண்டு செல்வதும் முக்கியம்.
இப்படிப்பட்டவர்கள் கடந்த மூன்றுமாதங்களாக முடங்கிக் கிடக்கிறார்கள் என்பது வேதனையான செய்தியாகும். பள்ளிப் பேருந்துதான் வாழ்க்கை. பேருந்துதான் அவர்களின் குடும்பம். பிள்ளைகளோடு பேருந்து நகரும்போது பெரிய குடும்பப் பொறுப்பு உள்ளவர்களாக அவர்கள் மாறிவிடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் பேருந்து ஓட்டுநர்கள். அவர்கள் ஓய்ந்துகிடக்கிறார்கள். என்பதில் பலருக்கும் வருத்தம் இருக்கிறது. வருமானம் இன்றி இருக்கிறார்கள்.
அவர்களுக்கான நல்ல செய்தியைக் கூறியிருக்கிறார் போக்குவரத்து அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் வீ கா சியோங் கூறியிருப்பது மகிழ்ச்சியான செய்தியாக இருக்கிறது. பள்ளி தொடங்குவதற்குமுன் இது சாத்தியமாகலாம். அதற்கான பேச்சு நடைபெற்றும் வருகிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். அதற்கான காலம் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும் இம்மாத இறுதிக்குள் அது நிறைவேறும் என்கிறார் அவர். ஆனாலும் எனக்கு அவகாசம் கொடுங்கள். நல்ல செய்தியைத் தருகிறேன் என்று கூறியிருக்கும் அவர், பள்ளிப்பேருந்து ஓட்டுநர்களின் வயிற்றில் பால் வார்த்திருக்கிறார் என்பதாகக் கூறலாம்.
கிடைக்கும் எதுவாயினும் ஆறுதலாகவே இருக்கும். ஆனால், அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதாக ஒருபோதும் இருக்காது. கடலில் பெருங்காயம் கரைத்த கதையாகத்தான் இருக்கும். பரவாயில்லை. ( Some thing is better than nothing ) என்பதுபோல், அறவே இல்லாமல் இருப்பதைவிட கிடைப்பதே மேல் என்பதால் அரசு கொடுப்பதை ஏற்றுக்கொள்வதே நல்லது.
மீண்டும் பள்ளிக்குப் போகலாம், நம்மை நாம் அங்கு தேடலாம்!