கோலாலம்பூர், மே. 17-
பக்காத்தான் ஹராப்பான், வீழ்ச்சிக்கு டத்தோஸ்ரீ நஜிப்பே காரணம் என்று கெடா முன்னாள் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் சாடியுள்ளார்.
தம்முடைய பதவி விலகளுக்கு பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின், உள்துறை அமைச்சர் ஹம்ஸா ஸைனுடின் மூலம் நெருக்கடி கொடுத்தாலும் இவை அனைத்திற்கும் நஜிப்பே சூத்திரதாரி ஆவார்.
உலகப் பார்வையை ஈர்த்துள்ள 1எம்டிபி ஊழல் வழக்கிலிருந்து தப்பிக்க அவர் இவ்வாறு அரசியல் காய்களை நகர்த்திக் கொண்டதாக முக்ரிஸ் குற்றஞ்சாட்டினார்.
நஜிப், ரோஸ்மா, ஸாஹிட் அமிடி ஆகியோருக்கும் ரிஸா அஸிஸ் போன்று நீதிச் சலுகைகளை பெறலாம்.
அதோடு, தம்முடைய வீழ்ச்சிக்கும் கெடா அரசியல் சரிவுக்கும் பாஸ் துணை போனது வருத்தமளிக்கிறது. தம்முடைய ஆட்சிக் காலக்கட்டத்தில் இஸ்லாமிய கட்சிகளுக்கு நிதி ஒதுக்கீட்டில் தாம் எடுத்த முயற்சிகளை பாஸ் மறந்து விட்டது போலும்.
அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளுக்கு நிதி ஒதுக்கீட்டை வழங்கிய முதல் மாநிலமாக கெடாவே திகழ்ந்தது. அதை அவர்கள் மறந்து விட்டனர். சில சட்டமன்ற உறுப்பினர்களின் பேச்சுகளை கேட்டு அவர்கள் மாறிவிட்டனர்.
2 பிகேஆர், 4 பெர்சத்து உறுப்பினர்கள் அணி தாவி பெரிக்காத்தான் நேஷனலுக்கு ஆதரவாகவும் டான்ஸ்ரீ முஹிடினுக்கு ஆதரவாகவும் மாறிவிட்டனர்.
அம்னோ, பாஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 17 பேருடன் இந்த 6 பேர் இணைந்து தம் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை முன்னெடுத்துள்ளனர்.
முன்னதாக 2023ஆம் ஆண்டு வரை முக்ரிஸ் மந்திரி பெசாராக இருக்கட்டும். அதோடு யாரையும் அணித் தாவ நெருக்கடி கொடுக்காது என்று பாஸ் கூறியது.
நான் என் தந்தையின் வழியை பின் பற்றுபவன். அம்னோவின் ஆட்சிக்கு ஒரு போதும் துணை போக மாட்டேன்.
முவாஃபாக்காட் நேஷனலில் இணைந்து கெடா மந்திரி பெசாராக தாம் செயல்பட பாஸ் கேட்டுக் கொண்டதை தாம் மறுத்து விட்டதாக அவர் கூறினார்.
இதனிடையே, முக்ரிஸ் பதவி விலகியதற்கு என்னை ஏன் காரணம் கூறுகிறார்?
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை விதித்தவுடன் நான் வீட்டிலேயே தான் இருக்கின்றேன். என் வேலைகளை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்னை குறை சொல்ல அவரிடம் என்ன ஆதாரம் உள்ளது?
புனிதமான இந்த ரமலான் மாதத்தில் முக்ரிஸ் பொய் சொல்வது நியாயம் அல்ல என்று நஜிப் தமது ஃபேஸ்புக்கில் கருத்து பதிவேற்றம் செய்திருந்தார்.