முதல் மரியாதை

பொதுவாகவே மலேசியர்களுக்கு ஒரு தப்பான சிந்தனை ஆழமாக வேரூன்றியிருக்கிறது. அது தவறு என்பதற்கு பல சான்றுகள் காணக் கிடைத்தாலும் வேரூன்றிய சிந்தனையிலிருந்து விடுபடாமல் இருப்பது மலேசியர்களை சிறுமைப்படுத்தும் செயலாகவே பல காலம் இருந்து வருகிறது.

கடுமையான வேலை செய்ய மலேசியர்கள் தயங்குகிறார்கள் என்பதுதான் அது. இது உண்மையா? இது குறித்து நீண்ட நாளாகவே சர்ச்சை இருந்துவருகிறது. ஆனாலும் அந்நிய நாட்டவர்களைத்தான் வேலைக்கு அமர்த்துவோம் என்ற பிடிவாதம் மலேசிய முதலாளித்துவத்திடம் இருந்துவருகிறது என்பது ஒரு மனநோய் என்கிறனர்.

உடல் உழைப்பில் மலேசியர்கள் சளைத்தவர்கள் அல்லர். ஆனாலும் அவர்களை வேலைக்கமர்த்தாமல் இருப்பதற்குக் காரணம் உழைக்கத்தயங்குவது அல்ல. அவர்களுக்கான ஊதிய வேறுபாடுதான். வேலைச்சலுகைகளில் வேறுபாடுகளே காரணம்.

தோட்டத்துறை காலியானபோது அங்கு உழைத்த மக்கள் வேலை இல்லை என்று வெளியேறினர். திரும்பவும் அவர்கள் தோட்டம் நாடி செல்ல விரும்பவில்லை. அதனால் அங்கு வேலை செய்ய அந்நியர்கள் தேவைப்பட்டனர்.

அங்குள்ள மக்கள் பிழைப்புத்தேடி வெளியேறினர். ஓரளவு படித்த இளைஞர்கள் தங்களுக்குத் தகுந்த வேலையைத்தேடினர். தேடிக்கொண்டனர்.

அதில் விடுபட்ட வேலையாக சந்தைப்பகுதிகளும் இருக்கின்றன. குறிப்பாக சந்தைப்பகுதிகளில் வேலை செய்ய தயக்கம் என்பது, சம்பளம் கவர்ச்சியானதாக அமையவில்லை என்பதுதான் காரணம். அதோடு வேலை நேரம் மலேசியர்களுக்குப் பொருத்தமாக இல்லை என்பதும் காரணமாகிவிட்டது. அதனால் அந்நியர்கள் சுறுசுறுப்பாக இணைக்கப்பட்டனர்.

இது போலத்தான் மற்ற கடினமான துறைகளும் அமைந்தன. இதையே காரணமாக்கிக்கொண்டு மலேசியர்களை ஓரங்கட்டியது முதலாளித்துவம்.

பின்னர் அது பழக்கமாகிவிட்டது, வழக்கமாகிவிட்டது. இதில் அந்நியர்களே உழைக்கக்கூடியவர்கள் என்ற தப்பான சிந்தனை கொரோன போல் பரவிவிட்டது. கடினமான கட்டுமானத்துறைகளிலும் இதே சிந்தனை குளம் கட்டி நின்றதால் மலேசியர்கள் எடுபடவில்லை.

கட்டுமான, சிறு ரகத்தொழில்களில் வேலை செய்ய மலேசியர்கள் வரமாட்டார்கள் பொதுக்கருத்து இருப்பினும் சீனர்கள் ஆதிக்கம் செலுத்திய தொழில்களில் சீனர்களே வருவதில்லை என்பது ஏன்?

இன்று நாட்டையே உலுக்கிக்கொண்டிருக்கும் கொரோனாவில் அந்நியர்களே அதிகம் பாதிக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டுவருகிறது, அதனால், தொழில்துறைகளிலிருந்து அவர்கள் சன்னம் சன்னமாக நீக்கப்படுகின்றனர்.

இவர்களுக்குப் பதில் நிரப்பப்படுகின்ற தேர்வுகளில் மலேசியர்கள் கலந்துகொள்கின்றனர். இப்போது மலேசியர்களின் மீது பார்வை திரும்புவதற்கு எது காரணம் என்று ஆய்வு செய்வார்களா?

மலேசியர்களை மலேசிய முதலாளித்துவமே குறைத்து எடைபோடுகிறது. அரசாங்கமும் அந்நியர்களை மிக அதிகமாக சார்ந்திருக்கிறது. இக்கொள்கை மறு ஆய்வு செய்யப்படவேண்டும்.

கூடிய மட்டும் அனைத்துத் தொழில்களிலும் மலேசியர்கள் நிரப்பப்படவேண்டும். மலேசியர்களுக்கு முதல் மரியாதை கொடுக்கப்பட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here