இதுவும் கடந்து போகும்!

பாலிக் கம்போங் என்ற பேச்சு பலரின் மூச்சாக இருக்கிறது. மலாய்ச் சகோதரககளுக்கு மட்டுமல்ல, பல இன மக்களுக்கும் பாலிக் கம்போங்  மகிழ்ச்சியான செய்தியா என்பதுதான் இன்றைய முதன்மைக் கேள்வியாக இருக்கிறது.

பாலிக் கம்போங் உண்மையிலேயே அனைவரின் மகிழ்ச்சிக்கு ஆபத்து விளைக்கக் கூடியதாக இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. இன்றைய நிலவரப்படி தொற்று பாதிக்கப்பட்ட 971 பேர் எல்லை தாண்டியவர்கள் என்று பதிவாகியிருக்கிறது. இது, சுகாதாரத்தறையின் தகவல்.

எப்போதுமே பரவும் தொற்று நோயாக கொரோனா இருப்பதால் 971 என்ற எண் பன்மடங்காக விரியும் என்ற அச்சம் ஏற்படுகிறது. இதுதான் உண்மை. இதற்கு மாற்றுவழி காணாவிட்டால் துன்பத்தை நாமே விலைகொடுத்து வாங்கிக் கொள்ளத் தயாராகிவிட்டோம் என்றுதான் பொருள் படுகிறது.

எப்போதுமே பெருநாள் காலம் என்றால் அது தேசியத் திருநாள் போலத்தான் அனைத்து மக்களுக்கும் இருக்கும். அனைத்து மக்களும் தங்கள் சொந்த ஊருக்குச் செல்வது ஒரு விழாபோலவே இருக்கும். இந்த முறை அப்படியிருக்க வாய்ப்பே இல்லை. கிராமம்,(கம்போங்) நகரம், மாநிலம்  நாடு, உலகம் அனைத்தும் ஒரே சிந்தனையில்தான் இருக்கிறது. இருக்க வேண்டும். செயல்முறைகளும் நாட்டுக்கு நாடு நெருக்கமாகவே இருக்கின்றன.

இக்கால கட்டம் மலேசியத்திற்கு மட்டுமே வந்த சோதனையல்ல. ஒட்டுமொத்த உலகத்திற்கே வந்த சோதனையாகும். ஆதலால், தங்களைச் சுற்றிமட்டுமே நடக்கின்ற துன்பமாக இல்லாமல் உலகப் பொதுமக்களுக்கானது என்ற நினைப்பில் அரசு வழங்கும் அறிவுரைகளை ஏற்பதுதான் சுகாதாரா பாதுகாப்பிற்குரிய சிறந்த முடிவாக இருக்கும்.

இதைத்தான் மலேசிய அரசும் அரசின் வழி சுகாதாரத்துறை முன்னணியாளர்களும் விரும்புகிறார்கள். சிரமங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் என்ற பாடல் அன்றே தீர்க்க தரிசனமாய் எழுதப்பட்டிருக்கிறது.

இன்றைய நிலைக்கு அது ஏகமாய் பொருந்துகிறது. ஆதலால், சிரமங்களைச் சீரணித்துக்கொண்டு சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றினால் மட்டுமெ அனைவருக்கும் விமோசனம் உண்டு. இதில் மொழி, இனம், மதம். சாதி. பனம்  ஏழை என்று ஏதும் கிடையாது. அனைவரையும் புரட்டிப்போட்டு, நடுத்தெருவில் நிறுத்தியிருக்கிறது.

எப்படிப்பட்ட காரும் எல்லையத் தாண்டக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டால், நிலைமை மோசமடையாமல் பார்த்துக்கொள்ளலாம். முதலில் மனிதனின் சிந்தனை மக்கள் பக்கம் திரும்ப வேண்டும். மக்களின் சிந்தனை நாட்டுப்பக்கம் திரும்ப வெண்டும். நாட்டின் சிந்தனை மக்கள் பக்கம் திரும்ப வேண்டும். மக்களின் சிந்தனை மீண்டும் நாட்டின் நன்மை பற்றியே சிந்திக்க வேண்டும். இதைசிந்தனை சுழற்சி என்பார்கள். அந்தசுழற்சி ஒரே நோக்கோடு இருந்தால்தான் வெற்றியின் தூரம் அருகில் தெரியும். வெற்றியை நோக்கிப் பயணம் போய்க்கொண்டிருக்கும் இந்நேரத்தில் பின்னடைவு பாதிப்பாகவே இருக்கும்.

பிள்ளைகளும் பாதிக்கப்படுகின்றார்கள் என்பது யாருக்கோ எனபதல்ல. நம்மையும் உட்படுத்தியது என்பதாய் நினைக்க வேண்டும். எல்லை தாண்டாதீர். வமபைத் தூண்டாதீர்! இதுவும் கடந்துபோகும். – கா.  இளமணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here