74 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தைப்பிங் சிறுவர் இல்லத்தின் பதிவு ரத்து!

கடந்த 74 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் தைப்பிங் சிறுவர் இல்லத்தின் பதிவை இயக்கங்களுக்கான பதிவகம் ரத்து செய்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதனை இல்லத்தின் இடைக்காலத் தலைவர் த.குணசேகரன் உறுதிப்படுத்தினார்.

ஏற்கெனவே இல்லத்தைச் செயல் முடக்கம் செய்யும்படி சமூகநல இலாகா உத்தரவிட்டிருந்தது. தற்போது இயக்கங்களுக்கான பதிவகம் இவ்வில்லத்தின் பதிவையும் ரத்து செய்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இவ்வில்லத்தில் நடந்ததாக கூறப்படும் பல்வேறு குளறுபடிகள், பிரச்சினைகள் காரணமாக அவசர ஆண்டுக் கூட்டத்தைக் கூட்டும்படி இல்லத்தின் 40 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்த கடந்த 3.3.2019ஆம் தேதி அவசரக் கூட்டம் கூட்டப்பட்டது.

மிகுந்த பரபரப்புடனும் எதிர்பார்ப்புடனும் கூடிய இவ்வில்லத்தின் அவசர ஆண்டுக்கூட்டம் இடைக் கால நிர்வாகத்தைத் தேர்ந்தெடுப்பதில் தோல்விக் கண்டதால் இயக்கங்களின் பதிவிலாகாவின் ஆலோசனைக்குப் பின்னர் மற்றொரு தேதியில் கூட்டத்தை நடத்தும்படி கூட்டத்தை வழி நடத்திய பேராக் மாநில சமூகநல இலாகாவின் துணை இயக்குநர் நோர் ஹனிஷா நோர் அபிஷா பிந்தி ஸுல்கிஃப்லி அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் கடந்த 27.4.2019ஆம் தேதி மறுமுறை கூட்டப்பட்ட கூட்டத்தில் அவசர கூட்டத்தை கூட்டக் கோரிக்கை விடுத்த 40 பேரில் குறைந்தது 30 பேர் வருகை தந்திருக்க வேண்டிய நிலையில் 21 பேர் மட்டுமே வந்திருப்பதால் அவசரக் கூட்டத்தை நடத்த முடியாது என்று சிலர் முன்மொழிந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவசரக் கூட்டமும் ரத்து செய்யப்பட்டது.

இம்முடிவில் அதிருப்தியடைந்த சில உறுப்பினர்கள் அன்றைய கூட்டத்தில் 60 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்ததால் அவசர ஆண்டுக் கூட்டத்தைத் நடத்தியிருக்கலாம்.என்றாலும் வேண்டும் என்றே ஆண்டுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக பதிவகத்திடம் முறையீடு செய்தனர். அதனைத் தொடர்ந்து தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளர்களை அழைத்துப் பேசிய பதிவக அதிகாரிகள் இல்லத்தை ஏன் மூடக் கூடாது என்று காரணம் கோரும் கடித்ததை அனுப்பியிருந்தனர். தற்போது இயக்கத்தின் பதிவை ரத்து செய்துள்ளனர்.இனி இல்லத்தின் பதிவுக்கு பொறுப்பாளர்கள் உள்துறை அமைச்சரிடமே மேல்முறையிட வேண்டும் என்றும் அமைச்சரின் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே சிறுவர் இல்லம் தொடர்ந்து செய்யப்பட விண்ணப்பிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே இச்சிறுவர் இல்லத்தில் கடந்த ஓராண்டுகளாக நடந்த பல குளறுபடிகள் காரணமாக சமூகநல இலாகா பல முன்னறிவிக்கைகளை வெளியிட்ட பின்னரும் இல்லத்தின் நிலவரங்கள் சீர்படாத காரணத்தால் இல்லத்தைச் செயல் முடக்கம் செய்யும்படி சமூகநல இலாகா உத்தரவிட்டிருந்தது. கடந்த 2019 செப்டம்பர் மாதம் மகளிர், குடும்ப சமுக மேம்பாட்டு அமைச்சின் சார்பில் அமைச்சரின் செயலாளர் யுஸ்லிஸா பிந்தி முகமட் யூசோப் கையெழுத்திட்ட அதிகாரப்பூர்வ கடிதத்தை இல்லத்தின் அறங்காவலர்களில் ஒருவரும் இல்லத்திற்கான லைசென்ஸ் பெற்றிருப்பவருமான இராமகிருஷ்ணன் த/பெ குப்புசாமிக்கு விடுத்திருந்தது.


இவ்வுத்தரவைத் தொடர்ந்து கடந்த 29.10.2019 ஆம் தேதி அப்போதைய தலைவர் ச.கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான நிர்வாகம் அமைச்சருக்கு மேல்முறையீடு செய்தது. நிர்வாகத்தின் மேல்முறையீட்டையும் மாணவர்களின் நலத்தையும் சீர்தூக்கிப் பார்த்த பின் அமைச்சர் நிர்வாகத்தின் முறையீட்டை தள்ளுபடி செய்து சமூகநல இலாகாவின் முடிவை நிலைநிறுத்தியது. அதனைத் தொடர்ந்து கடந்த 9.11.2019ஆம் தேதியுடன் இவ்வில்லம் தனது செயல்பாடுகளை முடக்கிக் கொண்டது. அதன் விளைவாக இவ்வில்லத்தில் தங்கியிருந்த 28 சிறுவர்கள் தத்தம் பெற்றோர், பாதுகாவலர்களிடம் அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதற்கிடையே தற்போது இயக்கங்களுக்கான பதிவகம் இவ்வில்லத்தின் பதிவையும் ரத்து செய்திருப்பது இல்லத்தின் வருங்காலத்தை மேலும் கேள்விக் குறியாக்கியுள்ளது.அதன் காரணமாக தைப்பிங் பட்டணத்தின் மையத்திலுள்ள பல லட்சம் மதிப்புள்ள நான்கு மாடி கட்டடத்தின் நிலையும்,தலைநகர் கோலாலம்பூரிலுள்ள இரண்டு கட்டடங்களின் நிலையும் பொருளகத்திலுள்ள பல லட்சம் வெள்ளி நிதியின் நிலையும் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இனி 74 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இல்லத்தின் நிலை என்னவாகுமோ என்ற ஏக்கம் பெரும்பாலான ஆதரவாளர்களிடையே ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here