ஆண்டவன் மெளனம் சம்மதமல்ல

ஆலயங்கள் திறக்கப்படும் என்பது செய்தி. அதனால் நன்மையா, தீமையா? கொரோனா தொற்று குறைந்தபாடில்லை. அதன் வளர்ச்சிக்கு மக்களே காரணம் என்பதிலும் எள்ளளவும் சந்தேகமில்லை. அப்படியிருந்தும் ஆலையங்களைத் திறக்கவேண்டும் என்று அடம்பிடிப்பதில் குழந்தைகளாகத்தான் இந்து மக்கள் இருக்கிறார்கள். இப்படிச் சொன்னால் கோபம்தான் வரும்.

கோபத்திற்குமுன் அறிவார்ந்த சிந்தனையல்லவா முன்நிற்கவேண்டும்.? அப்படியெல்லாம் ஏன் சிந்திக்கவில்லை. இக்கொடுமையான நேரத்திலும் வீட்டிலேயே இருங்கள் என்று சொல்வதே சரியான வார்த்தையாக இருந்துவருகிறது.

அப்படிச் சொன்னால் சிந்திப்பதைவிடச் சீறுகின்றவர்களே அதிகம் இருப்பார்கள். ஆனாலும் சொல்லாமலும் இருக்க முடியாது. காரணம் இந்திய சமூகம் இன்னல் படக்கூடாது என்பதுதான். முதற்கோணல் முற்றிலும் கோணல் என்பார்கள். ஆலயம் செய்த தவறு ஒரு தொடக்கமாகிவிடக்கூடாது.

ஆலயத்தில் நடந்தது நல்ல காரியமாக இருக்கலாம் . இதில், இரு வீட்டாரும் பொறுமைக்கு  முதலிடம் கொடுத்திருக்க வேண்டும். குறிப்பிட்ட ஆலயம் ஆலோசனை கூறியிருக்கவும் வேண்டும்.

வீட்டில் துன்பம் தலைதூக்கியிருக்கும்போது ஆண்டவன் ஆசீர்வதிப்பார் என்பது சரியானதாக இருக்காது. வீட்டின் துன்பம் என்பது நாட்டுக்கானது. அது மக்களுக்குக்கானது. இதில் நமக்கும் பங்குண்டு. அதனால்தான் சட்டத்தைப் பொதுவானதாக்கியிருக்கிறார்கள். அதைப் பின்பற்றும் கடமை ஒரு சாராருக்கு மட்டும் அல்ல. அனைத்து மக்களுக்குமானது.

திருமணம் என்பது மகிழ்ச்சியான சம்பவம். அதில் ஆண்டவனின் அருள் முக்கியமானதாகக் கருத்தப்படுகிறது. உறவினர்களின் வருகையும் முக்கியம். இன்னும் சில நாட்கள் பொறுத்திருக்க முடியாமல் போனதற்கு என்ன அவசரம். நேரம் சரியில்லை என்பது மிகத்தெளிவாயிற்று. ஆண்டவனே பேசியிருந்தால் பொறுமை என்றுதான் சொல்லியிருப்பான்.

மெளனம் சம்மதமல்ல. நல்ல காரியம் என்றாலும் குற்றம் பதிவாகியிருக்கிறது. ஆலயம் என்றாலும் நன்மை பேச வழியில்லாமல் போய்விட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here