சரியான நேரத்தில் அரசாங்கம் நல்ல முடிவைத் தேர்வு செய்திருக்கிறது என்றுதான் கூறவேண்டும். கள்ளக்குடியேறிகளை அவர்களின் சொந்த நாட்டிற்கே அனுப்பும் முடிவில் அரசு பின்வாங்காது என்பதை டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியிருப்பது வரவேற்புக்குரிய செய்தியாகும்.
கள்ளத்தனமாக நாட்டிற்குள் நுழைந்தவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்கள் சட்டத்தின் பிடியில் தண்டிக்கப்படக்கூடியவர்கள். அவர்கள் திரும்பவும் சொந்த நாட்டிற்கே அனுப்பிவைக்கப்படுவர் என்பது மனிதாபிமான செயல். கொரோனாவுக்குப்பின் அவர்கள் தண்டனையின்றி அவர்களின் சொந்த நாட்டிற்கே போகமுடிகிறது என்பது மதிக்கப்படும் செயலாகும்.
இதுவரை கள்ளத்தனமாக வந்தவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு மட்டுமே உட்படுத்தினர். இவர்களின் பயணப்பத்திரங்கள் ஒரு பொருட்டாக அமையவில்லை. முதலில் மருத்துவம் என்பது சரியான முடிவென்று கூறியும், கொரோனா சோதனைக்கு மட்டுமே உட்படுத்தப்படுவர் என்று அறிவித்தும் கூட சோதனைக்கு பலர் முன்வரவில்லை. அதனால்தான் தொற்றின் தன்மை அதிகமானது.
இவர்களை வளைத்து, தடுப்பு முகாம்களில் வைத்தனர். பலர் கோரோனாவிலிருந்து விடுபட்டுள்ளனர்.
இனியும் காலம் தாழ்த்துவது சரியானதாக இருக்காது. தடுப்பு முகாம்களில் இருக்கும் கள்ளக்குடியேறிகள் பலருக்கு ஆவணங்கள் இல்லை. அவர்களை இங்கெ அனுமதிப்பதும் சரியானதாக இருக்காது.
பயணப்பத்திரங்கள் இல்லாதவர்களைத் திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகள் விரவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முறையான நடவடிக்கையாகும். தடுப்பு முகாம்களில் 227 பேர் எதிர்மறையானவர்களாக இருக்கின்றனர். இவர்களில் வங்காள தேசிகளே அதிகமாக இருக்கின்றனர்.
கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டவர்கள் படிப்படியாக தங்கள் சொந்த நாட்டிற்கே அனுப்பப்படுவதை விமர்சனம் செய்வது பொருத்தமானதல்ல என்றும் மூத்த அமைச்சர் கூறியிருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதே! இவர்களை வெளியில் அனுமதித்திருந்தால் தொற்றின் எண்ணிக்கை பன்மடங்காகியிருக்கும் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.