வந்தால் மலை..!

வந்தால் மலை போனால்…. என்பதாக ஒரு பழமொழியை சர்வசாதாரணமாகக் கூறுவதைக் கேட்டிருக்கலாம். இப்பழமொழிக்குத் தகுதியானவர்கள் அந்நியர்களாகத்தான் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமல்ல, ஒர் அனுபவம்.

நாட்டின் பல பாகங்களில் வசிக்கும் கள்ளக் குடியேறிகள் தங்களின் வாடகை வீட்டிலேயே கடைகள் நடத்தத் தொடங்கியிருப்பது குறுங்கதையல்ல. ஒரு தொடர். இத்தொடரின் பெயர் வந்தால் மலை. போனால் ….. என்று கூறப்படுகிறது.

கிள்ளான் வட்டாரத்தில் மட்டுமே இப்படி நடப்பதாக கதை ஆரம்பமாகிறது. ஆனால் நாடெங்கும் நடப்பதாகத்தான் பொருள். கதா பாத்திரங்கள் அனைவரும் அந்நியர்கள். இவர்களின் கதை, கடையிலிருந்து தொடங்குகிறது. சந்தைகளாகட்டும். வீடுகளில் நடக்கும் கடைகளாகட்டும் அந்நியர்கள்தாம் முதன்மை நடிகர்கள். இவர்களின் கதைக்கு அல்லது கடைக்கு வாடிக்கையாளர்களாக இருப்பவர்கள் மலேசியர்கள்.

அந்நியர்கள் நடத்தும் கடைகள் பற்றி  கிள்ளான் நகராண்மைக் கழகத்திற்கு யாருமே புகார் செய்யவில்லை என்பது அச்சமா என்பது, அலட்சியமா? ஒருவேளை அலட்சியமாக இருந்தால் நகராண்மைக் கழகத்தைத்தான் குறை கூற வேண்டியிருக்கிறது.

உள்ளூர்க்காரர்கள் வீடுகளில் கடை நடத்தினால் உடனே நகராண்மைக் கழகத்திற்குத் தெரிந்துவிடுகிறது. அந்நியர்கள் கடை நடத்தினால் எப்படி தெரியாமல் போகிறது?

மளிகைக்கடைகள். பழக்கடைகள், தையற்கடைகள்  பலகாரக்கடைகள் என்றெல்லம் நடத்துகிறார்கள். ஆனால், நகராண்மைகழகத்திற்குத் தெரியவில்லையாம். தெரிவிக்கப்படவில்லையா?

நகராண்மைக்கழகத்தின் வேலைதான் என்ன? வீடமைப்புப் பகுதிகளைச் சுற்றிப் பார்ப்பதில்லையா? புகார்கள் பெற்றபின்தான் வருவோம் என்பதால்தான் அந்நியர்களின் ஆதிக்கம் அதிகமாகிவிட்டதா?.

அந்நியர்களில் சிலர் பெருங்கடைகளையும் நடத்துகிறார்கள். அதற்கு உள்நாட்டு மக்களே காரணம் என்பது ஊரறிந்த செய்தி. ஒப்புக்குச் சப்பாணி என்பதுபோல் இது பின்னணிப்பாட்டாக இருக்கும்.

உளநாட்டு மக்களில் பெரும்பாலோர் வீடுகளில் கடைகள்  நடத்துவது குறைந்துவிட்டது. இதற்குக் கெடுபிடிகளே காரணம். அந்நியர்கள் மிகத் தைரியமாக கடைகள் நடத்துகிறார்கள் என்றால், உள்நாட்டினர் கொடுக்கும் ஆதரவாகத்தானே இருக்கிறது.

வீடுகளை வாடகைக்கொடுப்போர் இது பற்றியெல்லாம் அலட்டிக்கொள்வதில்லை. வீட்டில் கடைகள் நடத்தவே கூடாது என்று சட்டம் சொல்கிறது. ஆனாலும் நடத்துகிறார்கள் என்றால் அவர்களின் துணிச்சல் அபாரமானது. அவர்கள் எதற்கும் துணிந்தவர்கள்.

வந்தால் மலை. போனால்.,.. என்பதுதான் கதையின் கருவாக இருப்பதால். வில்லத்தனம் தோற்றுப்போவதுதானே முடிவாக இருக்க வேண்டும். கடைகளை இழுத்து மூடுங்கள். கதை முடிந்துவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here