குடிபோதையில் வாகனமோட்டி ரமடான் சந்தையில் வியாபாரிகளுக்குக் காயம் விளைவித்த ஆடவர் மீது கோலகுபு பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
காங் மிங் ஹான் (வயது 32) எனும் அந்நபர் கடந்த மே 22ஆம் தேதி புக்கிட் பெருந்தோங் பகுதி இரவுச் சந்தையில் இச்செயலைப் புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பில் அவர் மீது குற்றவியல் சட்டம் பிரிவு 307 மற்றும் போலீஸ் சட்டம் பிரிவு 90 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் நேற்று உலுசிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் இருந்து கையில் விலங்குடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
நீதிபதி நூருல் மர்டியா முகமட் ரெட்ஸா முன்னிலையில் குற்றப்பத்திரிகை மொழிபெயர்ப்பாளரால் வாசிக்கப்பட்ட நிலையில் அந்நபர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்தார்.
இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி, அந்நபருக்கு 20 ஆயிரம் வெள்ளி மற்றும் ஒருவரின் உத்தரவாதத்தின் பேரில் ஜாமீன் வழங்க அனுமதித்தார். மேலும் அவர் இவ்வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஜூலை 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.