மரம் அறுக்கும் இயந்திரம், கர்ப்பிணிப் பெண்ணின் தலையைத் துண்டித்தது

கோவை மாவட்டம் சூலூரை அடுத்துள்ள நடுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கல்பனா என்ற பெண்ணைத்  திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அதர்சனா என்கிற 3 வயது பெண் குழந்தை உள்ள நிலையில், கல்பனா தற்போது 7 மாதக் கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக தர்மராஜ் மரப் பெட்டி தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வரும் நிலையில், தர்மராஜ் மின் கட்டணம் செலுத்தச் சென்றார். அப்போது அவரது மனைவி கல்பனா மர அறுவை ஆலையில் பணி செய்து கொண்டிருக்கும் பணியாளர்களுக்குத் தேனீர் கொண்டு வந்துள்ளார்.

அவர்களுக்கு தேநீர் கொடுத்துவிட்டு மர இழைப்பு இயந்திரத்தை இயக்கி உள்ளார். அப்போது திடீரென கல்பனாவின் சுடிதார் மற்றும் துப்பட்டா மர இழைப்பு இயந்திரத்தில் சிக்கியது. இதில் அவர் தலை சிக்க அப்படியே தலை துண்டிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டது.

தலை துண்டிக்கப்பட்ட உடல் துடித்துடித்து இறந்ததைப் பார்த்து கல்பனாவின் தாயார் பேபி மயக்கமானார். இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக சூலூர் காவல்துறையினருக்கும் தர்மராஜுக்கும்  தகவல் அளித்தனர்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் முதல் கட்ட விசாரணையில் கல்பனா அஜாக்கிரதையாகப் பணி மேற்கொண்டது தெரியவந்தது.

இதனையடுத்து அவரது உடல்  கைப்பற்றப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கல்பனாவோடு அவரது வயிற்றில் இருந்த சிசுவும் இறந்தது மிக மிக பரிதாபம் என அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here