விளைச்சலின் அறுவடை

இன்றைய இளசுகள் நாளைய பெரிசுகள் என்று சொல்வதில் எந்தவித நியாயமும் இல்லை என்கிறது ஒரு கூட்டம். இது உண்மையில்லை என்று இன்னொரு தரப்பு பட்டி மன்றத்துக்கு அழைக்கிறது.

இரவும் பகலும் எப்போதும் உண்டு. இதில் என்ன வேற்றுமை கண்டீர் என்றும் குரல் ஒலிக்கிறது.

இரவு என்பது வேறுதான். இதில்தான் அச்சமிருக்கிறது என்பார் அதிகம்.

இன்றைய இளசுகள் குறித்து பினாங்கு பயனீட்டாளர் சங்கம் ஆழ்ந்த கவலை கொண்டிருக்கிறது என்பது சமூகப்பார்வை. இதை மறுத்துவிடமுடியாது.

உலக அளவில் இன்று புகையில்லா தினம் அனுசரிக்கபடுகிறது. புகை என்பது பகை என்றுதான் காலந்தோறும் கூறிவருகின்றனர். அது இல்லாத தினம் என்பது வேதனையாக இருக்கிறது, ஏன்?

ஒவ்வொரு நாளும் புகையில்லாத நாளாக அல்லவா இருக்கவேண்டும். அதைவிடுத்து புகையில்லாத நாள் அனுசரிக்கப்படுகிறது என்பது கடலில் பெருங்காயம் கரைத்த கதையாகத்தானே தெரிகிறது.

எட்டு வயது குழந்தைகள் புகை பிடிக்கின்றன என்று ஆய்வில் கண்டறியப்பட்டதாக செய்தியும் இருக்கிறது. இந்த நிலை நீடித்தால் அந்தக் குழந்தைகளின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதுதான் இன்றைய கவலை என்கிறது  பி.ப.ச.

பிள்ளைகள் ஒற்றைச் சிகரெட் வாங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நடவடிக்கை ஊக்குவிக்கப்படுகிறதா? அல்லது தடுக்க உதவுகிறதா என்பதில் இன்னும் ஐயம் நிலவுகிறது.

குழந்தைகள் இப்போது பாக்கெட் சிகரெட்டுகளை வாங்கத் துணிந்துவிட்டனர் என்ற செய்தியும் இருக்கிறது. இச்செய்தியில் உண்மை இருக்கிறது. பாக்கெட் சிகரெட் வாங்குவதை அரசு ஏற்றுக்கொள்கிறது. மாணவர்கள், பிள்ளைகளுக்கு அனுமதி இல்லை என்பது பேச்சு, சட்டம் மட்டும்தான். நடைமுறையில் இல்லை என்பதும் வருத்தமான செய்தி.

இதனால். குழந்தைகள் குதூகலத்துடன் சில இடங்களில் சிகரெட் வாங்க முடிகிறது. அல்லது தந்தையின் பாக்கெட்டிலிருந்து காணாமல் போகிறது என்றும் கூறலாம்.

எட்டு வயது குழந்தைகள் சிகரெட் பிடிக்க ஆசைப்படுகிறதே? இதற்கு பெரியவர்கள் செய்யும் தவறுதான் காரணமென்று பெரியவர்களே உணர்வதில்லை.

தன்னைத் திருத்திக் கொள்ளாமல் ஏதோ வாழந்தவர்கள் ஒன்றல்ல இரண்டல்ல!

பிள்ளைகளுக்கு இது ஃபேஷன் . இதுதான் பாதாளத்திற்கான வழி என்பதை திருத்துவது யார்?

பெற்றோர் முன்னுதாரணமாக இல்லாவிட்டால் என்ன பரிசாகக்கிடைக்கும்?

சிறுசுகளின் சிந்தனை திருப்பப்படாவிட்டால். திருப்பங்கள் விபரீதமாகிவிடும் தூரம் அருகிலேயே இருக்கிறது.

இளசுகளை விட பள்ளி மாணவர்கள் வேப்  புகைக்கு ஆர்வம் காட்டுகிறார்கள். இது ஆண்மைக்கான உதரணமா? அல்லது அடுத்த விளைச்சலின் அறுவடையா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here