கறுப்பு என்றால் களையெடுத்து விடுவதா?

அமெரிக்காவின் மின்னபோலீஸ் நகரில் படுகொலை செய்யப்பட்ட கறுப்பின ஆடவர் ஜோர்ஜ் பிளோய்ட் மிகுந்த சர்ச்சையை இறந்தும் கொடுத்திருக்கிறார்.  

காவல் துறைக்கு எதிராக கிளர்த்தெழுந்த சர்ச்சை இப்போது அதிபர் டொனால்ட் டிரம்பின் தலைமைத்துவத்துக்கு எதிராகவும் கிளம்பியுள்ளது.

லாஸ் ஏஞ்சல் நகரமும் தற்போது போராட்டக் களமாக மாறியிருக்கிறது. எங்கு பார்த்தாலும் தீயின் ஜூவாலை தெறிக்கத் தொடங்கியிருக்கிறது.   

மக்களை சாந்தப்படுத்துவதற்கு மாறாக அதிபரை காப்பாற்ற அமெரிக்கா மெனக்கெட்டு வருகிறது.

மக்களின் சீற்றம் மலையென உயர்ந்து வெள்ளை மாளிகையையும் ஊடுருவியிருப்பதால் சீற்றத்தின் அளவு இதுதான் என்று நிர்ணயிக்க முடியாத சோதனையை அமெரிக்கா சந்தித்து வருகிறது.

 

மின்னசோட்டா நகரில் உள்ள மதுபான விடுதி ஒன்றின் பாதுகாவலராக வேலை பார்த்து வந்த 46 வயது கொண்ட கறுப்பினத்தவரான ஜோர்ஜ் பிளோய்ட் போலீசாரால் தலையின் பின்பகுதியில் பலமாக அழுத்தப்பட்டு  அதன் காரணமாக மரணமடைந்து விட்டார்.

இந்த மரணத்தின் பின்னணியில் நியாயங்களை புறக்கணித்த பேதமை நிறைந்துள்ளதாக கறுப்பினத்தவர்கள் மத்தியில் கொதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஜோர்ஜ் பிளோய்ட் தாக்கப்படும் காட்சி காணொளியாக வெளியாகி பரபரப்பாக பகிரப்பட்டு விட்டது.

ஓர் உண்மைச்சம்பவம் போதுமான சாட்சியங்களோடு உலக மக்களுக்கு காட்டப்பட்டு விட்டது.  

“கப் ஃபூட்” எனப்படும் இறைச்சிக் கடையின் முன்புறம் பலபேர் பார்க்கும் இடத்தில் பட்டவர்த்தனமாக போலீஸ் காரின் பின் சக்கரத்தில் தலையை அழுத்தியபடி டோரக் சார்வின் என்ற போலீஸ் அதிகாரி ஜோர்ஜ் பிளோய்ட்டின் தலையை அழுத்திப் பிடிக்கிறார்.

“என்னை விடுங்கள்… என்னால் மூச்சு விட முடியவில்லை. உடம்பெல்லாம் வலிக்கிறது” என ஜோர்ஜ் கதறுகிறார்.

டோரக் அவரை விடவில்லை. மேலும் அழுத்திப் பிடிக்கிறார்.

என் வயிறு வலிக்கிறது. குடிக்கத்  தண்ணீர் கொடுங்கள்” என கதறுகிறார் ஜோர்ஜ்.

அந்தக் கதறுதலும் செவிமடுக்கப்படவில்லை. மேலதிகாரிகள் அங்கு வரும்போது ஜோர்ஜ் பிளோய்ட் உயிர் பிரிந்திருப்பது தெரிகிறது.

இந்தக் காட்சிகள் அங்கிருந்த பொதுமக்களால் படமாக்கப்பட்டு உலகம் முழுவதும் பரவி விட்டது.

அமெரிக்க போலீசுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் இச்சம்பவம் எங்கெல்லாம் கறுப்புத் தோல் நிறத்தவர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் நிர்வாகம் மீதான கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் அம்பலத்திற்கு வந்து விட்டதால் அதனை அடக்கியாள முடியாத அமெரிக்க போலீஸ் கோபத்தில் குவிந்த கூட்டத்தை குறிவைத்துத் தாக்குவதில் மட்டும் கவனத்தைச் செலுத்தி வருகிறது.

ஜோர்ஜ் பிளோய்ட் மீது தாக்குதல் நடத்திய காவல் அதிகாரி டோரக் சாவின் மீது விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மின்னபோலீஸ் காவல் துறை சற்றே காலதாமதமாக அறிவித்தது.

அப்போதும் மக்களின் கோபம் அடங்கவில்லை. டோரக் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக போலீஸ் அறிவித்திருக்கிறது. நகரம் விட்டு நகரம் போராட்டம் விரிவடைந்த பின்னர் இந்த அறிவிப்பு வந்திருக்கிறது.

அம்பலத்திற்கு வந்து விட்டதால் அடக்கியாள முடியாமல் முதலில் அமெரிக்க போலீஸ் திணறியது. சம்பந்தப்பட்ட போலீஸ் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியதால் கோபம் அமெரிக்க அதிபர் மீதும் திரும்பி விட்டது.

ஜோர்ஜ் பிளோய்ட் என்ன பாவம் செய்தார்?

அவரது உயிரை எடுக்க போலீசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

ஜோர்ஜ் பிளோய்ட் பாதுகாவலராக வேலை பார்க்கும் மதுபான விடுதிக்கு நான் அடிக்கடி போவதுண்டு.

எனக்கு போதை அதிகமாகி விட்டால் எனது உடமைகளை அவர் பத்திரமாகப் பார்த்துக் கொள்வார்.

நான் ஒரு பெண் என்பதால் காரில் ஏறும் வரையில் என்னை யாரும் தொந்தரவு செய்யாமல் இருக்க அவர் மெனக்கெடுவதை நான் பலமுறை என் கண் முன்னே கண்டிருக்கிறேன். என் பிள்ளையைக் கொன்று விட்டதைப் போன்ற சோகத்தை உணர்கிறேன் என கிறிஸ்டினா யூனிக் டவ்சன் என்ற பெண்மணி முகநாலில் பதிவிட்டிருக்கிறார்.

உயிரை எடுக்க காவல் துறை அதிகாரிக்கு என்ன அதிகாரம் உள்ளது என்ற சந்தேகக் கேள்வியில் எழுப்பப்பட்ட வேள்வி காட்டுத் தீயாகப் பரவிக் கொண்டிருக்கிறது. சமாளிக்க முடியாமல் அமெரிக்கா தொடர்ந்து திணறி வருகிறது.

கோவிட்19 ஒரு பக்கம் கொத்திப் போடுகிறது,,,

ஜோர்ஜ் பிளோய்ட் மரணம் மறுபக்கம் எரித்துப் போடுகிறது

என்ன செய்யப் போகிறது அமெரிக்கா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here