சினை மாட்டுக்கு வெடி வைத்தவர் அதிரடி கைது!

சமீபத்தில், கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் கர்ப்பிணி யானை ஒன்று வயல்வெளியில் வைக்கப்பட்டிருந்த தேங்காயை உண்ட போது , அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் வெடித்து இறந்து போனது.

இந்த சம்பவத்துக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. யானையை கொன்ற வழக்கில் , வில்சன் என்பவர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பன்றிக்கு வைத்த வெடியை யானை சாப்பிட்டதால் , வெடி வெடித்து அது இறந்து போனதாக விசாரணையில் கைதானவர்கள் தெரிவித்துள்ளனர். யானை கொல்லப்பட்ட சம்பவத்தின் வடு ஆறுவதற்குள் மற்றோரு விலங்கினத்திடம் மனிதன் தன் கொடூர புத்தியை காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹிமாச்சலபிரதேச மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் ஜான்துதா பகுதியில் குர்திலால் என்பவர் பசு ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்த பசு, அந்த பகுதியில் மேய்ச்சலுக்குள் செல்வது வழக்கம். கடந்த மே மாதம் 25- ந் தேதி மேய்ந்து கொண்டிருந்த போது, வெடிபொருள் வெடித்து பசுவுக்கு வாய் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து, குர்திலால் போலீஸில் புகார் அளித்தார். இந்த சம்பவத்தையடுத்து, குர்திலால் வீட்டருகே வசித்து வந்த நந்தாலால் என்பவர் தலைமறைவாகி விட்டார். மேலும், கடந்த 10 நாள்களாக மாடு உணவு சாப்பிட முடியாமல் தவித்துள்ளது. தன் மாட்டின் நிலையை வீடியோவாக எடுத்து அதை சமூகவலைதளத்தில் குர்திலால் பிதிவிட்டதையடுத்து , அது வைரலானது.

தலைமறைவான நந்தாலால் மீது சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, போலீஸார் அவரை தேடி வந்தனர். சம்பவம் நடந்து 10 நாள்கள் கழித்து நேற்று அவரை போலீசார் கைது செய்தனர். விலங்குகளை துன்புறுத்துதல் பிரிவின் கீழ் நந்தாலால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிலாஸ்பூர் மாவட்ட எஸ்.பி தேவகார் சர்மா , சம்பவ இடத்தையும் காயமடைந்த மாட்டையும் பார்வையிட்டார். பின்னர், அவர் கூறுகையில், மாட்டுக்கு வாய் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கால்நடை மருத்துவர்கள் அதற்கு தீவிர சிகிச்சை கொடுத்து வருகின்றனர். சிகிச்சைக்கிடையே மாடு கன்றையும் ஈன்றுள்ளது” என்றார்.

இந்த சம்பவம் குறித்து ஹிமாச்சல் பிரதேச மாநில போலீஸ் டி.ஜி.பிக்கும் , எஸ்.பி. தேவகார் சர்மா விரிவாக கடிதம் எழுதியுள்ளார். விலங்கினங்களுக்கு தொடர்ந்து கொடுமை செய்து வருபவர்களுக்கு தகுந்த தண்டணை அளிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று விலங்கின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here