சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரன், காடேக் சட்டமன்ற உறுப்பினர் ஜி.சாமிநாதன் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்ட சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சிவராசாவிடம் இன்று போலீசார் வாக்குமூலம் பதிவு செய்தனர்.
இன்று (10.06.2020 )மதியம் 2.00 மணிக்கு சுங்கை பூலோ போலீஸ் நிலையத்திற்கு வந்த சிவராசாவுக்கு ஆதரவாக கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயகுமார், லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் பாமி, கெஅடிலான் மகளிர் பிரிவு உதவித் தலைவி சங்கீதா ஜெயகுமார் ஆகியோரும் வந்திருந்தனர். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், கடந்தாண்டு அக்டோபர் 10ஆம் தேதி 12 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த 12 பேர் கைது செய்யப்பட்டிருப்பது என்பது நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் நற்பெயரைச் சீர்குலைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய சதித்திட்டம் என்று புறநகர் மேம்பாட்டுத்துறை முன்னாள் துணை அமைச்சரான சிவராசா சாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.