செவ்வாயில் தண்ணீர் தேடிச் செல்லும் அரபு விண்கலம்

ஏழு மாதக் காலத்தில் 493 மில்லியன் கிலோமீட்டர் பயணம் செய்து, செவ்வாய் கோளில் தண்ணீர் தேடச் செல்கிறது அரபு விண்கலம். இன்னும் சில வாரங்களில் இந்த விண்கலம் விண்ணில் ஏவப்படும்.  செவ்வாய் கோளில் தண்ணீரை உருவாக்கத் தேவையான ஹைட்ரஜன், ஆக்சிஜன் இரண்டுமே வெளியேறிக்கொண்டே இருப்பதால், தங்கள் ஆராய்ச்சி தண்ணீர் தேடுவதில் தான் அதிக கவனம் செலுத்தப் படும் என்கிறார் விண்கலத் திட்ட இயக்குனர் சாரா அல் அமிரி.

ஐக்கிய அரபு எமிரேட் இந்த விண்கலத்தை ஏவுகிறது. செவ்வாய் கோளை ஒரு முறை சுற்றிவர 55 மணிநேரம் ஆகும். இந்தத் திட்டம் இளம் அரபு விஞ்ஞானிகள் விண்வெளிப் பொறியியல் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு பெரிய ஊக்கமாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவிக்கிறார்.

செவ்வாய் கிரகத்தை சென்றடைய 493 மில்லியன் கிலோமீட்டர் பயணம் மேற்கொள்ள வேண்டும். எனவே ஏழு மாதங்கள் பயணித்த பிறகே செவ்வாய் கோளைச் சுற்றிவருவதற்காக திட்டமிடப்பட்ட வட்டப் பாதையை இந்த விண்கலம் சென்றடையும். செவ்வாய் கோளுக்கு சென்றடைந்தவுடன் காலநிலை மாற்றம், செவ்வாயின் சுற்று சூழல் குறித்த தரவுகளை இந்த விண்கலம் அனுப்ப துவங்கிவிடும். பிறகு 687 நாட்களுக்கு செவ்வாய் குறித்த தரவுகளை இது புவிக்கு அனுப்பிக்கொண்டே இருக்கும்.

”நாமேட் அமல்” என இந்த அரபு விண்கலத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. ”நாமேட் அமல்” என்பதன் பொருள் நம்பிக்கை. ஜப்பானிய தீவு ஒன்றில் இருந்து இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. மேலும் ஜப்பானிய ராக்கெட் மூலம் செலுத்தப்படவுள்ள இந்த விண்கலம் மூன்று விதமான உணர்விகளைக் கொண்டுள்ளது.

முதல் அரபு விண்வெளி வீரராக சவுதி அரேபியாவின் இளவரசர் சுல்தான் பின் சல்மான் அல்-சவுத் 1985ம் ஆண்டு விண்வெளிக்குச் சென்றார். இவர் அமெரிக்க விண்கலத்தில் சென்றுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here