தஞ்சை அருகே 10-ம் நூற்றாண்டு சிற்பங்கள் கண்டெடுப்பு

தஞ்சையை அடுத்த பூதலூர் நாலுரோடு அருகே கன்னிமார்தோப்பு என்ற மேடான பகுதியையொட்டி விஷ்ணு மற்றும் சமணர், சப்தமாதர் சிற்பங்கள் காணப்படுவதாக பூதலூரை சேர்ந்த புத்தர் என்பவர் வரலாற்று ஆய்வாளர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்படி வரலாற்று மற்றும் சுவடியியல் ஆய்வாளரும், தஞ்சை சரசுவதி மகால் நூலக தமிழ் பண்டிதருமான மணி.மாறன், ஆசிரியர்கள் ஜெயபால், ராமமூர்த்தி, நேரு, அரசு ஆகியோருடன் சென்று களப்பணி மேற்கொண்டார். அப்போது அங்கு சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டன. இது குறித்து மணி.மாறன் கூறியதாவது:-

வயல்வெளியில் இறங்கி கன்னிமார்தோப்பு பகுதிக்கு சென்றோம். அங்கே புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் காணப்படுவது போன்ற மிகப்பெரிய கிணறு இருப்பதை காண முடிந்தது. இதுபோன்று தஞ்சை மாவட்டத்தில் கிணறு அமைப்பை காண முடியாது.

இந்த அமைப்பை பார்க்கும்போது ஏதோ ஒரு காலகட்டத்தில் புதுக்கோட்டை, சிவகங்கை பகுதிகளில் இருந்து புலம் பெயர்ந்து வந்த மக்களால் இந்த கிணறு வெட்டப்பட்டிருக்கலாம். இந்த கிணற்றின் கரையில் சம்தமாதர் புடைப்பு சிற்பம் மிக சிறிய அளவில் ஒரே கல்லில் வடிக்கப்பட்டுள்ளது.

இப்புடைப்பு சிற்பம் பாதி மண்ணில் புதைந்து மறுபாதி மார்பில் இருந்து தலை வரையில் வெளியே தெரியும்படி காணப்படுகிறது. இந்த சிற்பம் கி.பி.10-ம் நூற்றாண்டு சோழர் காலத்தை சேர்ந்தவையாக அறிய முடிகிறது. இதில் இருந்து சிவாலயம் ஒன்று இருந்திருந்து முற்றிலுமாக சிதைந்து போயிருக்கலாம் என கருத முடிகிறது.

இந்த கிணற்றில் இருந்து மேற்கு திசையில் 150 அடி தொலைவில் மிக அழகிய 10-ம் நூற்றாண்டை சேர்ந்த விஷ்ணுவின் சிற்பமானது இடுப்பிற்கு கீழே மண்ணில் புதையுண்ட நிலையில் காணப்படுகிறது. அழகிய புடைப்பு சிற்பமாக இருகரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி வலது கரத்தில் அபயம் காட்டி, இடது கரத்தை இடுப்பில் ஊன்றியவாறு காணப்படுகிறது.

காது, கழுத்து, கை, இடுப்பு என அனைத்திலும் அணிகலன்கள் திகழ காணப்படுகிறது. விஷ்ணு சிற்பம் இருக்கும் இடத்தில் இருந்து வயல்வெளியில் வடமேற்கில் 200 அடி தொலைவு சென்றால் ஒரு கால்வாயின் மதகினையொட்டி சமண தீர்த்தங்கரரின் புடைப்பு சிற்பம் ஒன்று பீடம் வரை புதையுண்ட நிலையில் காண முடிந்தது.

முக்குடையின் கீழ் இருபுறமும் சாமரதாரிகள் சாமரம் வீச அமர்ந்த கோல சமண தீர்த்தங்கரரின் புடைப்பு சிற்பம் இந்த பகுதியில் கண்டறியப்பெற்றதன் மூலம் இங்கே சமணம் தழைத்தோங்கியதை அறிய முடிகிறது. உடைந்த ஏராளமான சோழர்கால கருப்பு, சிவப்பு வண்ண பானை ஓடுகள் அந்த வயல்வெளிப்பகுதி முழுவதும் நிறைந்து காண்படுகின்றன.

வளவம்பட்டி அரசு பள்ளி வளாகத்தில் சமண தீர்த்தங்கரரின் சிற்பம் இருக்கின்றது. சோத்துப்பாழையில் இருந்து வில்வராயன்பட்டி பகுதிக்கு வந்து குடியேறிய மக்கள் பின்னர் ஏழு கிளைகளாக பிரிந்து சித்திரக்குடி, ராயந்தூர், கல்விராயன்பேட்டை, சித்தாயல், குணமங்கலம், வைரபெருமாள்பட்டி, கோவில்பத்து போன்ற பகுதிகளில் குடியேறி இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here