வழிபாட்டுத்தலங்களில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்- கவர்னர் கிரண்பேடி

தற்போது 5-ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த 8-ந் தேதி முதல் மதவழிபாட்டுத் தலங்களில் பக்தர்களை அனுமதிக்க மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அனுமதி அளித்தது.

அதன்பேரில் புதுச்சேரியில் கடந்த 8-ந் தேதி முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். வழிபாட்டுத் தலங்களுக்குள் நுழையும் முன்பு கை, கால்களை கழுவுதல், முக கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்களை பக்தர்கள் கடைபிடித்து வருகின்றனர்.

இதுகுறித்து புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி சமூக வலைத்தளத்தில் ஒரு ஆடியோ மூலம் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தற்போது வழிபாட்டுத்தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. புதுவையில் வாழும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் அனைவருக்கும் நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். அனைவரும் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்லும்போது கண்டிப்பாக முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது அவசியம். இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த மசூதிக்கு செல்லும்போது இதனை பின்பற்ற வேண்டும். தொழுகை நடத்தும் போது பயன்படுத்தப்படும் விரிப்புகளை வீட்டிலிருந்தே கொண்டு வந்து எடுத்துச் செல்வது நல்லது.

இதுதொடர்பாக ஏற்கனவே அமைச்சர் ஷாஜகான் வக்பு வாரிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். இதேபோல் தேவாலயங்களிலும், கோவில்களிலும் வழிபாடு நடத்தும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்களில் குளிர்சாதன வசதிகளை பயன்படுத்த வேண்டாம். அரசின் விதிமுறைகளுக்கு ஒத்துழைக்கும் அனைவருக்கும் எனது நன்றியை கூறிக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here