கொரோனா காலத்திலும் பண மழையில் நனையும் திருப்பதி ஏழுமலையான்

ஊரடங்கு காலத்திலும் திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் பண மழை கொட்டுகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஏழுமலையான் கோயிலில் கடந்த மார்ச் 20ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி நிறுத்தப்பட்டிருந்தது.

சுமார் 79 நாட்களுக்கு பிறகு கடந்த 8-ம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் உள்ளூர் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, கடந்த 11-ம் தேதி முதல் வெளிமாநில பக்தர்கள் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், ஆன்லைனில் 300 கட்டண முன்பதிவு டிக்கெட் பெற்ற வெளிமாநில பக்தர்களால், இலவச தரிசன டிக்கெட் பெற்றவர்கள் இ-பாஸ் கிடைக்காததால் தரிசனம் செய்ய செல்ல முடியவில்லை.

நாளொன்றுக்கு 6,000 டிக்கெட்டுகள் மட்டுமே பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இதைத்தவிர விஐபிகள் வரிசையில் 500 முதல் 700 பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். உள்ளூர் பக்தர்கள் மட்டும் காலை 7.30 மணி முதல் இரவு 8 மணி வரை நீண்ட வரிசையில் வந்து தரிசித்தனர். வெளி மாநிலத்தவர்களும் தரிசனம் செய்ய திருப்பதி தேவஸ்தானமும், ஆந்திர அரசும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதற்கு முன்பு ஒரு நாளொன்றுக்கு சுமார் 90 ஆயிரம் பேர் வரை சாமி தரிசனம் செய்துவந்தனர். அப்போது, ஒரு நாளொன்றுக்கு 2 கோடி முதல் 3 கோடி ரூபாய் வரை உண்டியல் காணிக்கை கிடைத்தது. தற்போது, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதை அடுத்து, ஆந்திர மாநிலத்தில் உள்ள பக்தர்கள் மட்டுமே சுவாமியை தரிசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஊரடங்குக்குப் பின் நடைதிறந்த முதல் நாளில் 43 லட்சம் ரூபாயும், இரண்டாவது நாளில் 40 லட்ச ரூபாயும் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது. பக்தர்களின் வருகை வெறும் 10 சதவீதம் தான் என்றாலும் உண்டியல் காணிக்கை மட்டும் குறையவில்லை. ஊரடங்கால் கடந்த மூன்று மாதங்களாக பல்வேறு தொழில்களும் முடங்கிக் கிடக்கும் நிலையில், ஏழுமலையானுக்கு காணிக்கை அள்ளிக் கொடுக்க தயாராக இருக்கும் பக்தர்களால் கோவிலின் உண்டியலில் பண மழை கொட்டுகிறது.

ஆன்லைன் காணிக்கை:

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ 1.79 கோடி பக்தர்கள் ஆன்லைன் மூலமாக உண்டியல் காணிக்கை செலுத்திய நிலையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஊரடங்கு இருந்தாலும் தங்கள் வீடுகளில் இருந்தபடியே ஏழுமலையானுக்கு ஆன்லைன் மூலம் இ.உண்டியில் 1.97 கோடி ரூபாய் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here