புகையிலை பயன்பாடு தொடர்புடைய நோய்களால் ஆண்டுக்கு 27 ஆயிரம் பேர் மரணமடைகின்றனர் என்பதனை கருத்தில் கொண்டு, கட்சி பேதங்களைக் கடந்து அனைத்து தரப்பினரும் உணவங்களில் புகைபிடிப்பதைத் தடைசெய்ய ஆதரவு அளிக்க வேண்டும் என்று முன்னாள் சுகாதார அமைச்சர் சூல்கிப்ளி அமாட் கேட்டுக் கொண்டார்.
கடந்த பாக்காத்தான் ஹாராப்பான் ஆட்சியில் அமலாக்கம் செய்யப்பட்ட, உணவகங்களில் புகைபிடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து அமலில் இருக்கும் என உறுதியளித்துள்ள நடப்பு அரசாங்கத்தின் சுகாதார துணையமைச்சர் நோர் அஸ்மி கசாலிக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
மக்களின் சுகாதாரம் குறித்த விவகாரங்களில் அரசியல் தலையீடு இல்லாமல் இருப்பதை உறுதி செய்தால், மக்களின் நலன் காக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உணவகங்களில் புகைபிடிக்க விதிக்கப்பட்ட தடை தொடரும் என சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா வெளிப்படையாக அறிவிப்பார் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டார்.