கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பு – சிலி சுகாதாரத்துறை அமைச்சர் ராஜினாமா

சீனாவில் தோன்றிய உயிர்கொல்லி கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி ஆட்டிப்படைத்து வருகிறது. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் கொரோனா வைரஸ் தாக்கம் மிக தீவிரமாக உள்ளது.

அங்கு 1 லட்சத்து 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அந்த நாட்டில் புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் ஜெய்மி மனாலிக் கொரோனா விவகாரத்தை சரியாக கையாளாததே இதற்கு காரணம் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தன.

இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் ஜெய்மி மனாலிக் நேற்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை அந்த நாட்டின் அதிபர் செபாஸ்டியன் பினேராவிடம் வழங்கினார். அவரது ராஜினாமாவை அதிபர் ஏற்றுக்கொண்டார்.

புதிய சுகாதாரத்துறை அமைச்சராக என்ரீக் பாரீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மூத்த மருத்துவரும் அறுவைசிகிச்சை நிபுணருமான என்ரீக் பாரீஸ் கூடிய விரைவில் நாட்டில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வருவேன் என உறுதி பூண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here