நாகர் கோவில் நாகராஜா ஆலயம்

சர்ப்ப தோஷங்கள்… 

 

ராகு, கேது ஆகிய கிரகங்களால் உருவாகும் ராகு கேது தோஷங்களை இப்படியும் அழைப்பார்கள். ராகு கேது தோஷம் ஒருவருக்கு இருந்தால் திருமணம் முதல் தொழில் வரை எல்லாம் பாதிக்கப்படும். இதனால் அவரது வாழ்க்கை முன்னேற்றத்தை நோக்கி செல்லாமல் தேய்பிறையாய் தேய்ந்துகொண்டிருக்கும்.

 

இந்த தோஷங்களுக்கு எங்கே சென்றால் பரிகாரங்கள் செய்யலாம் என்று நாள்தோறும் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் உண்மை நம்பிக்கையுள்ள பக்தர்களுக்கு நாகராஜர் அருளும் தலத்தைப் பற்றி இந்த பதிவில் காண்போம்.

 

சிதம்பரம் நடராஜர் கோவில் எமகண்ட வேளை பார்த்து சிதம்பரம் நடராஜர் கோவில் செல்லுங்கள். எமகண்டம் முடிந்த பிறகுதான் மற்ற தெய்வங்களை வணங்க வேண்டும் என்பார்கள்.

 

 

ஆனால் சித்திரகுப்தரை எமகண்ட வேளையில் வணங்கவேண்டும். திங்கள்கிழமையாக பார்த்து சென்று எமகண்ட வேளைக்காக காத்திருந்து சிவகாமி சுந்தரி அம்மாள் சந்நதியில் அமர்ந்திருக்கும் சித்திரகுப்தரை வணங்கி வந்தால் கேது தோஷம் நீங்கும். வாழ்வில் இன்பம் பொங்கும்.

 

இந்தியாவிலேயே மிகவும் சிறந்த ஒரு நாகர் ஆலயம் என்றால் அது நாகர்கோவில்தான். நாகமே காவல் காக்கும் கருவறையைக் கொண்டது நாகர்கோவில் நாக ராஜா ஆலயம்.


இந்தக் கோவிலில் இரு அரச மரங்கள் இருக்கின்றன. அதை வலம் வந்து பின் இறைவனது சந்நிதியில் வணங்கினால் ராகு கேது தோஷங்கள் நீங்கும்.

கி.பி பதினாறாம் நூற்றாண்டு வரை இக்கோவில் சமணப்பள்ளியாகவே   விளங்கி வந்துள்ளதை கோவில் கல்வெட்டுகள் வழி அறிந்து கொள்ளலாம்.

 

கொல்லமாண்டு 681(1505)முதல்697 வரையான காலத்தைச் சேர்ந்த இக்கல்வெட்டுகள் கோட்டாறான மும்முடிச் சோழபுரத்து நாகர்கோவிலில் அமைந்துள்ள பள்ளியில் இருந்த கேரள நாராயணனான குணவீர பண்டிதன் மற்றும் சீவகருடையான கமலவாகன பண்டிதன் என்பாரைக் குறிப்பிடுகின்றன.

 

நேமிநாதம் எனும் சமண இலக்கண நூலின் ஆசிரியரும் குணவீர பண்டிதன் எனக் குறிப்பிடப்படுவதால் இக்கல்வெட்டு குறிப்பிடும் குணவீர பண்டிதனே நேமிநாதத்தை இயற்றியவராயிருக்கலாம்.

 

இக்கல்வெட்டுகள் பெரும்பாலும் நாகருக்கும் நாகராஜாவுக்கும் அமுது படைப்பதற்காக பள்ளிச்சந்தமாக வழங்கப்பட்ட நிலங்களைப் பற்றியே குறிப்பிடுகின்றன. இக்கல்வெட்டுகள் வென்று மண் கொண்ட பூதல வீர மார்த்தாண்டவர் மனது காலத்தையதாகும்.

 

நாகர் கோவிலுக்குத் தென்புறமுள்ள கோவிலில் காணப்படும் கொல்லம் 764 ( 1588 )ம் ஆண்டினைச் சேர்ந்த கல்வெட்டொன்று கோட்டாற்றை நயினார் திருவனந்தாழ்வார் பூசைக்கு கருங்குள வளநாட்டு கும்பிக் குளத்து திருக்குருகை பெருமாள் தன்மமாக நாகரை எழுந்தருளுவித்ததைக் குறிப்பிடுகின்றது.

 

இதற்குப் பின்னரே சமண வழிபாடு மறைந்து இந்துக் கோவிலாக மாற்றம் பெற்றிருக்க வேண்டும்.

 

நாகருக்கும் நாகராஜாவுக்கும் இட்ட அமுதினைக் குறிப்பிடும் போது காலையில் நாகர்க்கும் நாகராஜாவுக்கும் நான்கு நாழி படைக்கப்பட்டது. உச்சி வேளையில் நாகர்க்கு நான்கு நாழியும் நாகராஜாவுக்கு ஆறு நாழியும் இரவில் நாகர்க்கு மட்டும் இரு நாழியும் படைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக் கிழமை படி இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. சமணர்கள் இரவு வேளை உண்ணாமை எனும் ராத்ரி போஜன விரமணத்தைக் கடைபிடிப்பவர்கள் ஆதலால் நாக ராஜனுக்கான இரு நாழி உணவு மதிய உணவுடன் கூடுதலாக படைக்கப்பட்டு வந்துள்ளது என்பதை இக்கல்வெட்டு மூலம் அறிந்து கொள்ளலாம்.

 

புல், புதர்களுடன், செடி, கொடிகள் என்று இருந்த இந்தக்காட்டில் புல் அறுக்கும் பெண் ஒருத்தி, மாட்டிற்குப்புல் அறுக்கும்போது, அவள் கையிலிருந்த அரிவாள் ஐந்து தலைநாகம் ஒன்றின் தலையில்பட்டு ரத்தம் பீறிட்டது. இதைக்கண்டு பயந்து நடுங்கிய அப்பெண், பக்கத்தில் உள்ள கிராம மக்களை அழைத்து வந்தாள்.

 

அவர்கள் கூட்டமாக வந்து பார்க்கும்போது, அந்த ஐந்து தலைநாகம் சிலையாக காணப்பட்டது. கிராமமக்கள், ஒரு சிறிய தென்னங்கீற்றால் வேயப்பட்ட கூரைக்கோவில் கட்டி வழிபட்டு வந்தனர்.

நாளடைவில் அக்கம் பக்கத்து கிராமமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து, நாகராஜரை தரிசித்துச் சென்றதில், ஆலயம் மிகப் பிரபலமாயிற்று.

தமிழகத்துக்கோவில்களில் வேறேங்கும் காணப்படாத தனிச்சிறப்பு, ஆலயத்தின் மூலஸ்தானத்தின் மேல்கூரைத் தென்னை ஓலையால் வேயப்பட்டதாகும். உதய மார்த்தாண்டவர்மா மன்னர், இக்கோவிலை புதுப்பித்து கொண்டிருந்தபோது, ஒருநாள் அவர் கனவில் நாகராஜர் தோன்றி, ஓலைக்கூரையாலான இருப்பிடத்தையே நான் மிகவும் விரும்புகிறேன்.

 

முதன் முதலில் அக்கூரையினடியில் தான் வாசம் செய்தேன். ஆதலால் அதை மாற்ற வேண்டாம் என்று கூறினார்.

அக்கூரையில் எப்போதுமே ஒரு நாகப்பாம்பு காவல் புரிகிறது என்றும், வருடதோறும் கூரைவேயப்படும் போது ஒரு பாம்பு வருவது வழக்கம் என்று கூறப்படுகிறது. இக்கோவிலின் அர்ச்சகர்கள் கேரளாவிலுள்ள, பாம்பே காட்டு இல்லம் என்ற குடும்பத்தை சேர்ந்தவர்கள். பரம்பரை பரம்பரையாகவே நாகத்தை வழிபடுபவர்கள்.

ஓலையாலான மூலஸ்தானத்தில் நாகராஜர் அமர்ந்துள்ள இடம் எப்போதும் ஈரமாகவே இருப்பதும், அங்கிருந்து எடுக்கப்படும் மண்ணே இக்கோவிலின் முக்கிய பிரசாதமாகும். இம்மண் ஆறுமாதகாலம் கறுப்பு நிறமாக இருந்து வருகிறதாம்.

எவ்வளவோ காலமாக எடுத்தும் அம்மண் குறையாமல் இருப்பது நாகராஜனின் ஒப்பற்ற அருளைக் குறிக்கிறது என்று சொல்கிறார்கள்.

 

கூரைவேயப்பட்டிருக்கும் மூலஸ்தானத்திற்கும் பின்னால் தொழுநோய் போன்ற பதினெட்டு நோய்களை குணப்படுத்தும் ‘ஓடவள்ளி’ என்ற ஒரு பச்சிலைக்கொடி படர்ந்திருந்ததாகவும், அதனடியில் தன் இனத்துடன் குட்டி குஞ்சுகளுடன் நாகங்கள் குடியிருந்தனவாம். அதனை பக்தர்களின் பயத்தினால் அகற்றி விட்டார்களாம்.

அக்காலத்தில் பிரசாதத்தை ‘ஓடவள்ளி’, இலையில் கொடுப்பார்களாம். ஒவ்வொரு ‘ஓடவள்ளி’ இலையும், ஒவ்வொரு சுவையுடன் இருக்கும். இப்பொழுது பிரசாதம், புற்று மண்ணும், சந்தனமும் வாழை இலையில் கொடுத்து வருகிறார்கள்.

 

அம்மன் கோவிலில் மட்டும் குங்குமம் பிரசாதம் கொடுக்கப்படுகிறது. தேவைப்பட்டவர்களுக்கு கிலோ கணக்கில் புற்றுமண்னை விலைக்கு தருகிறார்கள்.

ஆண்டுதோறும் இவ்வாலயத்தில் ‘தை’ மாதத்தில் அனந்தகிருஷ்ணன் முன்னுள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றி, பத்து நாட்கள் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடுகிறார்கள். ஆவணி மாதம் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பாகத் திருவிழா நடைபெறுகிறது.

என்றாலும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படும் திருவிழா மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறுகின்றனர். அதுசமயம் பக்தர்கள் கூடி, உப்பு, மிளகு, பசும்பால், மரத்தினாலான மரப்பொம்மைகள் என காணிக்கைகளை செலுத்தி, நாகராஜனை தரிசித்து அருள் பெறுவதற்கு வழிபடுகின்றனர்.

நாகதோஷங்களை ஒழிக்க இது ஒரு புண்ணியதலமாக விளங்குகிறது. பிள்ளைப்பேறு வேண்டுவோர் நாகச் சிலைகளால் சூழப்பட்ட இந்த அரச மரங்களைச்சுற்றி வலம் வந்தால் பலனடைவர் என்ற நம்பிக்கையும் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here