சிலாங்கூர் மாநில அரசாங்கத்தை கவிழ்க்க முடியுமா?

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தை கவிழ்த்து விட்டு, தேசிய கூட்டணி ஆட்சி அமைக்க பல்வேறு யுக்திகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது தெளிவாக தெரிகிறது.

ஒரு குடையின் கீழ் வலுவாக இருக்கும் சிலாங்கூர் மாநில பாக்காதான் ஹாராப்பான் அரசாங்கத்தை கவிழ்க்க மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட நடவடிக்கையாக, சிலாங்கூர் சட்டமன்றத் துணை சபா நாயகரும் செமந்தா சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் டோராயா அல்வி பி.கே. ஆர் கட்சியில் இருந்து விலகினார்.

அவரது பதவி விலகல் மாநில அரசியலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதனால் அடுத்தகட்ட நடவடிக்கையாக கோத்தா கெமுந்திங் சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான வி. கணபதிராவ், கோலகுபுபாரு சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங், தெராத்தாய் சட்டமன்ற உறுப்பினர் பிரையன் லாய் வாய் சோங், பண்டமாரான் சட்ட மன்ற உறுப்பினர் தோனி லியோங் தக் ஆகியோர் பாக்காத்தான் ஹாராப்பானிலிருந்து வெளியேறி விட்டனர் என்ற தகவல் பரவியது. அவர்கள் நால்வரும் கூட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பில் அந்த வதந்தியை மறுத்தனர்.

அதன் பின்னர், பெர்மாத்தாங் சட்ட மன்ற உறுப்பினர் ரோசானா ஜைனால் அபிடின் தேசிய கூட்டணியில் இணைந்து விட்டார் என்ற வதந்தியை அவரும் மறுத்து விட்டார்.

பல சட்டமன்ற உறுப்பினர்கள் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியில் இருந்து வெளியேறுகிறார்கள் என்ற பதற்றத்தை உருவாக்க முயல்கிறார்கள். அது ஒரு போதும் நடக்காது. சிலாங்கூர் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி வலுவாகவே இருக்கிறது என அதன் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

சிலாங்கூர் மாநில பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி வலுவாகவாகவே இருக்கிறது என்பது உண்மையா? அவர்கள் வலுவாகதான் இருக்கிறார்களா? என்பதனை அடுத்த சில நாட்களில் நடக்கப்போதும் அரசியல் நகர்வுகள் உணர்த்தும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here