கொரோனா பதற்றத்தின் பிடியில் பெய்ஜிங்

சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், 56 நாட்களுக்கு பின்னர், அதன் இரண்டாவது அலை தலைநகர் பெய்ஜிங்கை முதலில் தாக்கும் என்று பெய்ஜிங் நகர நிர்வாகமும் சரி, ஜின்பிங் அரசும் சரி எதிர்பார்க்கவில்லை. அங்குள்ள ஜின்பாடி மொத்த சந்தைதான், இப்போது கொரோனா தொற்றின் வினியோக மையமாக மாறி விட்டது.

பீஜிங்கில் நேற்று புதிதாக 31 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக அங்கு தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 137 ஆக உயர்ந்துள்ளது.

ஜின்பாடி சந்தையை பொறுத்தமட்டில் அந்த நகரின் 80 சதவீத இறைச்சி, காய்கறி தேவையை கவனிக்கிறது. தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கு சென்று வந்துள்ளனர்.

அங்கிருந்து தொற்று கொத்து கொத்தாக பரவுகிற நிலையில், அந்த சந்தைப்பகுதியில் அமைந்துள்ள 27 சுற்றுப்புறங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தள்ளன. மீண்டும் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்கிறார்கள்.

மக்களை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ள புதிய கட்டுப்பாடுகள் இவைதான்-

* ஜின்பாடி சந்தைப்பகுதியில் உள்ள 27 சுற்றுப்புறங்கள் நடுத்தர ஆபத்தான பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. சந்தையையொட்டி அமைந்துள்ள பகுதி, அதிகபட்ச ஆபத்தான பகுதியாக வரையறை செய்யப்பட்டுள்ளது.

* நடுத்தரம் மற்றும் அதிகபட்ச ஆபத்தான பகுதிகளில் வாழ்கிற மக்கள் நகரை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

* குறைவான ஆபத்து பகுதியில் வசிக்கிறவர்கள் நகரை விட்டு வெளியேற முடியும். ஆனால் வெளியேறுவதற்கு முன்பாக அவர்கள் தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை பரிசோதனை மூலம் நிரூபித்துக்காட்டியாக வேண்டும்.

* பெய்ஜிங் நகரில் நினைத்த உடன் கொரோனா தொற்று பரிசோதனை செய்யும் நிலை இல்லை. 3 மையங்கள் பரிசோதனை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஜூலை மாதம் வரை பரிசோதனைகளுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த மையங்களுக்கு வெளியே நீண்ட வரிசைகளில் மக்கள் காத்துக்கிடக்கிறார்கள்.

* பெய்ஜிங் நகருக்குள் வருகிற, அங்கிருந்து வெளியே செல்கிற 1200 விமானங்களில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அடுத்த மாதம் 9-ந் தேதி வரை ரெயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன.

* தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், கல்லூரி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டுள்ளன.

* சாலைகள் திறந்திருக்கும். கம்பெனிகள், தொழிற்சாலைகள் இயங்கலாம். ஆனால் நகரம் இரண்டாம் எண் எச்சரிக்கையில் வைக்கப்பட்டிருக்கும்.

* பெய்ஜிங் நகர மாவட்டங்களை நகரத்துக்குள் உள்ள நகரங்களைப் போலவே அதிகாரிகள் நிர்வகித்து வருகிறார்கள். கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து கண்காணிக்கிறார்கள். அப்போதுதான் கொரோனாவை கட்டுக்குள் வைக்க முடியும் என நம்புகிறார்கள்.

இதற்கிடையே பெய்ஜிங் இரண்டாவது அலை வீசுவதற்கு காரணமாக அமைந்து விட்ட ஜின்பாடி மொத்த சந்தையின் பொது மேலாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சில உள்ளூர் நிர்வாக அதிகாரிகளும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் சொல்கின்றன.

மொத்தத்தில் பெய்ஜிங் நகரம் பதற்றத்தின் பிடியில் சிக்கித்தவிக்க தொடங்கி இருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here