பெட்டாலிங் ஜெயா வட்டாரத்தில் போதைப் பொருள் குற்றங்களுக்காக 104 பேர் கைது

பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல் துறையினரும் சிலாங்கூர் மாநில போதைப் பொருள் தடுப்பு பிரிவினரும் இணைந்து மேற்கொண்ட அதிரடி சோதனையில் போதைப் பொருள் குற்றங்களுக்காக 104 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெசா மெந்தாரி, தாமான் டத்தோ ஹருன், தாமான் மேடான் ஆகிய இடங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. போதைப் பொருட்களை உட்கொள்பவர்கள், விநியோகம் செய்பவர்கள், இடைத்தரகர்கள் என பல்வேறு குற்றங்களுக்காக மொத்தம் 104 பேர் கைது செய்யப்பட்டதாக அம்மாவட்ட காவல் துறை தலைவர் ஏசிபி நிக் எஸானி முகமட் பைசல் தெரிவித்தார்.

 

கடந்த புதன் கிழமை இரவு 9.30 மணி தொடங்கி இன்று அதிகாலை 6 மணி வரை அவ்வட்டாரங்களில் வீடு வீடாகச் சென்று போலீஸார் சோதனை செய்தனர். அதில் மொத்தம் 144 பேர் விசாரிக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஷாபு 7.62 கிராம், ஹெராய்ன் 112.1 கிராம், கஞ்சா 3220 கிராம், கெத்தமின் 1.8 கிராம் எரிமின் மாத்திரைகள் 0.5 கிராம், கெத்தும் 9000 மில்லி லிட்டர் என பல வகையான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று அவர் கூறினார்.

சிலாங்கூர் மாநில போதைப் பொருள் தடுப்பு பிரிவின் இயக்குனர் டாக்டர் நசிரா பின்தி ஹஜி சடிரோன் கூறுகையில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய நடவடிக்கை தொடர்பில் பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல் துறை பெரும் உதவியாக இருக்கிறது. என்றார். போதைப் பொருள் விவகாரத்தில் இரு பிரிவுமே தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அவர் எச்சரித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here