துன்பங்களைப் போக்கும் துளசி

பாற்கடலில் இருந்து கிடைத்தவற்றில் கவுஸ்துபமணி, மகாலட்சுமி, துளசி ஆகியவற்றை விஷ்ணு வைத்துக் கொண்டார். மற்றவற்றை தேவர்களுக்கு வழங்கினார். துளசி இலையில் முப்பத்து முக்கோடி தேவர்கள், 12 சூரியர்கள், அஷ்ட வசுக்கள், இரண்டு அஸ்வினி தேவர்கள் வசிப்பதாக ஐதீகம். துளசி இலையின் நுனிப் பகுதியில் பிரம்மதேவனும், மத்தியப் பகுதியில் மகாவிஷ்ணுவும் இருப்பதாக சொல்கிறார்கள். மேலும் மகாலட்சுமி, காயத்ரிதேவி, சரஸ்வதி, பார்வதி ஆகியோரும் கூட துளசியில் வாசம் செய்கிறார்களாம்.

துளசியானவள், எப்போதும் தனது நாயகனான மகாவிஷ்ணுவை துதித்துக் கொண்டிருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. அவளது இன்னொரு வடிவமே, பூமியில் வளரும் துளசிச் செடி என்றும் கூறப்படுகிறது. துளசிக்கு பல்வேறு பெயர்கள் உள்ளன. ஆனால் அவை அனைத்து பெயர்களுமே, விஷ்ணுவோடு தொடர்புடையவையாகவே இருப்பது, அவர்களுக்கான நெருக்கமான தொடர்வை புலப்படுத்துவதாக இருக்கின்றன.

துளசிக்கு, ‘ஹரிபிரியா’ என்ற நாமமும் உண்டு. இதற்கு ‘விஷ்ணுவின் மனதிற்கு இனியவள்’ என்று பொருள். அதேபோல் ‘வைஷ்ணவி’ என்றும் துளசி போற்றப்படுகிறாள். இந்த பெயருக்கு ‘விஷ்ணுவை சொத்தாக கொண்டவள்’ என்பது பொருளாகும். பொதுவாக ஆலயங்களில் பெருமாளுக்கு அர்ச்சனை செய்யப்படும்போது, ‘விஷ்ணுவல்லப’ என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். இந்த விஷ்ணுவல்லப என்பதும் துளசியையே குறிக்கும். இதற்கு ‘விஷ்ணுவுக்கு பிரியமானவள்’ என்று அர்த்தம்.

ஸ்ரீ துளசி என்பது, துளசியை மரியாதையாக அழைக்கும் பெயராகும். இந்தப் பெயரில் ‘ஸ்ரீ’ என்பது திருமகளான மகாலட்சுமியைக் குறிப்பதாகும். அதனால்தான் பசுமையான இலைகளைக் கொண்ட துளசியை வழிபடுபவர்களுக்கு அதிர்ஷ்டம் வந்துசேரும் என்கிறார்கள். மகாவிஷ்ணுவின் மனைவியான மகாலட்சுமி வீற்றிருக்கும் துளசியை வழிபட்டால், அதிர்ஷ்டத்திற்கும், ஐஸ்வரியத்திற்கும் பஞ்சம் இருக்காது என்பதே பலரின் கூற்றாக இருக்கிறது. துளசிக்கு, ‘பிருந்தா’ என்ற பெயரும் உண்டு. துளசி அடர்த்தியாக வளர்ந்திருக்கிற இடம் ‘பிருந்தாவனம்’ என்று அழைக்கப்படும். கிருஷ்ணர் விளையாடிய பிருந்தாவனம் புனிதத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

பசுமையான பச்சை நிறத்தில் இருப்பது ‘ராம துளசி’ என்றும், கரும்பச்சையாக இருப்பது ‘கிருஷ்ண துளசி’ என்றும் அழைக்கப்படுகிறது. துளசிக்கு இணையான தாவரமோ, மூலிகைகளோ வேறு எதுவும் இல்லை என்பார்கள். ஏனெனில் ‘துளசி’ என்ற சொல்லுக்கு ‘தன்னிகரற்றது’ என்ற பொருளும் உண்டு. துளசியில் நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி எனப்படும் கஞ்சாங்கோரை, திருத்துழாய் ஆகிய வகைகள் இருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here