20 ஆண்டுகளாக தீயணைப்பு துறையில் பணியாற்றி பல்வேறு சாதனைகளை புரிந்த பஹாருடின் பின் சாஃபுவான் என்பவர் சாலை விபத்தில் மரணமடைந்ததை தொடர்ந்து கோலாலம்பூர் தீயணைப்பு இலாகா அவரின் குடும்பதாருக்கு உதவி வழங்கியது.
கடந்த 2000ஆம் ஆண்டில் செப்டம்பர் 4ஆம் தேதி தொடங்கி இறக்கும் வரை கோலாலம்பூர் ஹங் துவா தீயணைப்பு நிலையத்தில் அவர் பணியாற்றினார். அதோடு ரிம் எனப்படும் அதிவேக மோட்டார் சைக்கிளை ஓட்டும் அனுபவம் கொண்டவர். தீயணைப்பு இலாகாவில் இது போன்ற மோட்டார் சைக்கிள் குழு உள்ளது.
கடந்த ஜூன் 7ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் அவர் உயிரிழந்தார். அவரின் மறைவை தாங்க முடியால் 40 வயது நிரம்பிய அவரின் மனைவி செத்தே அக்தார் பின்தி ஹாஜி முகமட் உட்பட 4 பிள்ளைகள் தவிக்கின்றனர்.
வேலை மட்டுமின்றி பல்வேறு இயக்கங்களிலும் அவர் சிறந்து விளங்கினார். குறிப்பாக தீயணைப்பு இலாகாவிலுள்ள விளையாட்டு அமைப்பு, கோலாலம்பூர் – விலாயா கலை கலாச்சார அமைப்பு, தீயணைப்பு கூட்டுறவு நிறுவனம் உள்ளிட்ட பல அமைப்புகளில் அவர் இணைந்து செயல்பட்டு வந்தார்.
பஹாருடினின் சேவைக்காக தீயணைப்பு இலாகா உட்பட அரசாங்கம் மற்றும் இதர அமைப்புகள் அவரின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கின. வீடமைப்பு ஊராட்சி துறை அமைச்சர் சுராய்டா கமாருடின் அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு நிதி உதவிகளை எடுத்து வழங்கினார்.
தீயணைப்பு தொழிலாளர்கள் கூட்டுறவு 87 ஆயிரம் வெள்ளியும் மலேசிய தீயணைப்பு சமூக இலாகா 3 ஆயிரம் வெள்ளியும் கோலாலம்பூர் – விலாயா விளையாட்டு மற்றும் கலை கலாச்சார இயக்கம் ஆயிரம் வெள்ளியும் இஸ்லாம் மரண சகாயநிதியாக ஆயிரம் வெள்ளியும் நாடு முழுவதும் உள்ள தீயணைப்பு தொழிலாளர்கள் சங்கம் 52 ஆயிரத்து 600 வெள்ளியும் தாகாஃபுல் கூட்டு காப்புறுதி 49 ஆயிரம் வெள்ளியும் உட்பட மேலும் இரு நிறுவனங்கள் தனித் தனியாக நிதி உதவிகளை வழங்கியுள்ளனர்.