முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவுக்கு இன்றுவரை போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு கிடைக்கவில்லை என்று கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கோடிகாட்டினார்.
பக்காத்தான் ஹராப்பான் பிளஸ் கூட்டணியில் துன் டாக்டர் மகாதீர் மீண்டும் பிரதமராவது குறித்து விரிவாகப் பேசப்பட்டது. போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால் மீண்டும் புத்ராஜெயாவைக் கைப்பற்ற முடியும்.
ஆனால் இப்போதைக்கு துன் டாக்டர் மகாதீருக்கு போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இல்லை என்று டத்தோஸ்ரீ அன்வார் தெரிவித்தார். பக்காத்தான் ஹராப்பான் கூட்டத்தில் துன் டாக்டர் மகாதீர்தான் பிரதமராக வரவேண்டும் என்று ஜசெக – அமானா கட்சிகள் இயங்கவில்லை.
முதல் பரிந்துரையில் அவ்விரு கட்சிகளும் என்னைத்தான் பிரதமர் பதவிக்கு முன்மொழிந்தன. ஒருவேளை டத்தோஸ்ரீ அன்வாருக்கு போதுமான ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லை என்றால் அடுத்த பரிந்துரையாக துன் டாக்டர் மகாதீருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று மட்டுமே அவ்விரு கட்சிகளும் கேட்டுக் கொண்டன.
ஆகவே, பிரதமர் விவகாரத்தில் அவ்விரு கட்சிகளும் எனக்கு எதிராக இயங்கவில்லை என்பதை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது ஆதரவாளர்களுடன் ஃபேஸ்புக்கில் நேரடியாகப் பேசும்போது தெரிவித்தார்.
துன் டாக்டர் மகாதீருக்குப் போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருக்கும் என்று நம்பினார்கள். ஆனால் இதுவரை அவருக்கு அந்த ஆதரவு கிட்டவில்லை என்று போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார். பொருளாதாரத்தையும் நாட்டையும் காப்பாற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை கவரும் முயற்சியில் நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்று டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.