வர்த்தக விவகாரங்களை இலகுவாக்கும் வகையில் சிறப்புத் தளம்

நவீன அரசாங்கம் அமைப்பினை நிறைவேற்றும் வகையில் இணையம் வாயிலாகச் சேவை வழங்கும் நடைமுறைகளை இன்னும் மேம்படுத்த பொதுச்சேவைத் துறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

குறிப்பாக பொதுச்சேவை சம்பந்தப்பட்ட விவகாரங்களை நவீன முறையில் செயல்படுத்த வழிவகுக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் பிரதமர் துறை கீழ் இயங்கும் மலேசிய நிர்வாகத் திட்டமிடுதல் மற்றும் நிர்வாகப் புதுப்பித்தல் பிரிவு (MAMPU) பலதரப்பட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது.

தொழில்முனைவர் மேம்பாட்டு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சின் கீழ் செயல்படும் அப்பிரிவு பொதுச்சேவையை மேம்படுத்தும் விவகாரங்களைச் செயல்படுத்தி வருகின்றது.

SME CORP Malaysia குழுமத்துடன் செயல்பட்டு வரும் அந்தப் பிரிவு தற்போது ஓரிட வர்த்தக உரிமம் பெறுதல் மற்றும் பதிவுசெய்யும் இணையதளத்தை உருவாக்கியுள்ளது.

Malaysia Biz என்ற அந்தத் தளத்தின் வழி வர்த்தகங்கள் சம்பந்தப்பட்ட விண்ணப்பங்களும் உரிமம் பெறும் முறைகளும் இன்னும் இலகுவாகவும் விரைவாகவும் செய்து முடிக்கப்படும். காரணம் இவ்விரு சேவைகளும் ஒரே தளத்தின் கீழ் செயல்படுகின்றன.

http://malaysiabiz.gov.my  என்ற அகப்பக்கத்தின் வழி இந்தத் தளத்திற்குள் செல்லலாம். இந்தத் தளமானது உரிமம் வழங்கும் அமலாக்கப் பிரிவினர் மற்றும் வர்த்தகப் பதிவு அமைப்புடன் இணைந்து செயல்படுத்தும் வியூகத் திட்டமாகும்.

இந்தத் தளத்தில் 17 அமைப்புகள் வரையறுக்கப்பட்டுள்ளன. மலேசிய நிறுவனப் பதிவிலாகா (SSM), மலேசிய கூட்டுறவு ஆணையம் (SKM), மலேசிய கட்டடக் கலைத்துறை வாரியம் (SAM), மலேசிய பொருள் அளவு நிபுண வாரியம், மலேசிய பொறியியல் வாரியம், மலேசிய தொழில்முனைவர் மேம்பாட்டு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சு, வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சு, மலேசியத் தொழிலாளர்கள் பாதுகாப்பு மற்றும் சுகாதார அமைப்பு, மலேசிய மீன்பிடி இலாகா, மலேசிய கட்டுமானத்துறை மேம்பாட்டு வாரியம், கோலாலம்பூர் மாநகர் மன்றம், பினாங்கு மாநகர் கழகம், பெட்டாலிங் ஜெயா நகராண்மைக் கழகம், குவாந்தான் நகராண்மைக்கழகம், சுபாங் ஜெயா நகராண்மைக்கழகம், காஜாங் நகராண்மைக் கழகம் ஆகிய அமைப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன.

இந்தத் தளத்தில் வாடிக்கையாளர்கள் 5 எளிய வழிமுறைகளைப் பின்பற்றி தங்களின் விவகாரங்களைச் செய்துமுடிக்கலாம். குறிப்பாக விண்ணப்பக் கட்டம் தொடங்கி கட்டணம் செலுத்தும் கட்டம் வரையிலும் எவ்விதத் தடையுமின்றி செய்துமுடிக்கலாம்.

Add To My Selection என்ற செயலி வழி விண்ணப்பம் மற்றும் வியாபார உரிமம் விவகாரங்களை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கலாம். அவர்களின் விண்ணப்பம் My Tray எனும் செயலி மூலம் செயல்படுத்தப்படும். இதனை அடுத்து My Tracker என்ற செயலி முகப்பு வழி அவர்கள் தங்களின் விண்ணப்ப முடிவுகளைப் பார்க்கலாம்.
ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் My Business , My License வெளியிடப்படும். மேலும் விண்ணப்பங்கள் மற்றும் உரிமங்களைப் புதுப்பிக்கும் செயல்முறைகளையும் வாடிக்கையாளர்கள் இவ்விரண்டு செயலி முகப்புகள் மூலம் செய்து முடிக்கலாம்.

வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப இந்தச் செயலிகள் விவேகக் கைப்பேசியிலும் செயல்படுத்த முடியும்.

MyBiz-Data மூலம் மலேசிய நிறுவனப் பதிவிலாகாவிடம் இருந்து உரிமையாளர்கள் விவகாரங்கள் மற்றும் அவர்களின் வியாபாரத் தகவல்களையும் வாங்கும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.

இந்தத் தளத்தின் மூலம் புதிய வியாபாரங்களின் தர வரிசையை அடையாளங்காணும் வகையில் 12 எண் முறையும் செய்து தரப்பட்டுள்ளது.

இந்த வசதிமிக்கத் தளத்தின் வழி உலக ரீதியில் வர்த்தகப் போட்டியிடும் தன்மையையும் தயாரிப்புகளின் தரம் உயர்வதையும் உறுதிசெய்ய முடியும்.

2030 தேசிய தொழில்முனைவர் திட்டமைப்பில் இடம்பெற்றதுபோல் தொழில்முனைவர் மேம்பாட்டு வழித்தடத்தில் இந்தத்தளமும் பயணிக்கிறது. மேலும் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகங்களை ஆரம்பிப்பதற்கும் அது முன்னேற்றம் காண்பதற்கும் இந்தத் தளம் செயல்முறைகளை இலகுவாக்கித் தருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here