முகக்கவசம் என்பது மூச்சுக்கவசம் என்றாகி, பல பரிணாமங்களைப் பெற்றுவிட்டது. பெற்றும் வருகிறது. இதன் பயன்பாட்டின் எல்லை எதுவரை என்று தெரியவில்லை. அந்த எல்லை இன்னும் கண்ணுக்குப் புலப்படவில்லை.
அப்படியென்றால் இன்னும் தூரம் இருக்கிறது என்பது உறுதியாகிவிட்டது. அதனால் முகக்கவசங்களின் தேவை பரவலாகவே அதிகமாகவே இருக்கிறது. சில இடங்களில் முகக் கவசங்களின் தேவை நடப்பில் இருக்கிறது. இன்னும் சில இடங்களில் அதன் தேவை குறைந்திருக்கிறது. இல்லையென்றாலும் பரவாயில்லைபோல் இருக்கிறது. இன்னும் சிலர் எல்லா இடங்களிலும் பயன்படுதுக்கிறார்கள்.
ஆனால், மக்களின் அவசியத் தேவைகளில் ஒன்றாக முகக்கவசம் கந்தர் சஷ்டி கவசம்போல் உருவெடுத்துவிட்டது என்பது மட்டும் உண்மை.
இஸ்லாமியப் பெண்கள் கலாச்சாரம் கருதி முகத்துணி அணிகிறார்கள். முகத்துணி எப்படித்தோன்றியது என்பதல்ல இப்போதைய ஆய்வு. அவர்கள் முகத்துணி அணிவதன் சிறப்பு இன்று உணரப்பட்டிருக்கிறது. அந்த முகத்துணியில் மதம் தெரியவில்லை. ஆனாலும் சுகாதாரப் பாதுகாப்பு கொரோனாவுக்கு முன்பே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்பதுதான் உண்மை.
மதங்களுக்கு அப்பால் முகக்கவசம் என்பது பொது சுகாதாரம் என்ற வகையில் இருப்பதால் முஸ்லீம் அல்லாதவர்களும் முகக்கவசம் அணியவேண்டிய கட்டயாம் உருவாகிவிட்டது.
கையில் 10 வெள்ளி கூட இல்லாமல் இருக்கலாம். கவசம் இல்லாமல் இருக்க முடியாது. சில இடங்களில் முகக்கவசம் அவசியம் தேவைப்படும். அதனால் எந்த நேரமும் முகக்கவசம் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் கட்டாயமாகியிருக்கிறது என்பதால் ஏற்புடைய, எப்போதும் பயன்படுத்துகின்ற முகக்கவசங்களின் தேவை இப்போது வணிகச்சுற்றுப்பாதையில் நுழைந்திருக்கிறது.
சுகாதாரம், வணிகம் என்ற நோக்கில் செயல்படுவது குறுகிய காலம் அல்ல. கூப்பிடு தூரமும் அல்ல. குறைந்த வருமானத்திற்குக் கைகொடுக்கும் இணைதொழிலாகவும் இருக்கும்.
இந்தியப் பெண்மணிகளைத் தையல் என்று சிறப்பித்துக் கூறுவார்கள். இன்றைய மலேசிய இந்தியப் பெண்கள் தையற்கலையில் சிந்தனை செலுத்தவில்லை. பிற இனப்பெண்கள் புதுமை வடிவங்களில் தையலை மாற்றிக்கொண்டுவிட்டனர்.
தையல் தொழிலில் இருக்கின்றவர்கள் நீண்ட நாட்களுக்குப் பயன்படும் முகக்கவசங்களைத் தயாரித்தால் வரவேற்பு அதிகமாகவே இருக்கும். அதற்கான் துணிவகைகளைத்தேர்வு செய்வதிலும் கவனம் செலுத்தலாம். மேலும் புதிய வடிவங்களைக் கையாளலாமே!