எஸ்பிஎம் மாணவர்களுக்கு இணையம் வாயிலாக இலவச கற்றல் கற்பித்தல்

இந்திய மாணவர்கள் எஸ்பிஎம் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மெய்நிகர் பயிற்சி திட்டம் ஒரு நீண்ட இடைவேளைக்குப் பிறகு பள்ளிக்கு திரும்பியுள்ள ஐந்தாம் படிவ மாணவர்களுக்காக ஜூன் 24ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது.

கோவிட் 19 நோய்க் கிருமித் தொற்றுக் காரணமாக மக்கள் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி உள்ளார்கள. அதோடு பொருளாதார ரீதியிலும் சிக்கல்களை எதிர் நோக்குகிறார்கள். இத்தருணத்தில் மாணவர்களின் தேவைகளைப் பற்றித் தாங்கள் மிகுந்த விழிப்புடன் இருப்பதாக இந்த இலவச பயிற்சியை வழங்கும் மௌர்நா கூறினார்.

மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு சில மாணவர்கள் தேர்வை அணுகுவதற்குச் சவாலை எதிர்நோக்கி உள்ளார்கள். அவர்களுக்கு உதவ நாங்கள் முன் வந்துள்ளோம். எஸ்பிஎம் வெற்றி மெய்நிகர் பயிற்சி என்பது ஓர் இலவச திட்டமாகும்.

இது ஜூலை தொடங்கி ஆறுமாதங்களுக்கு மேற்கொள்ளப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு 4 மிக முக்கியமான பாடங்கள் குறித்துப் போதிக்கப்படும். அவை மலாய்மொழி, வரலாறு, ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகும் என மௌர்நா கூறினார்.

எஸ்பிஎம் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு மலாய்மொழியும் வரலாற்றுப் பாடமும் மிக முக்கியமாக அமைகின்றது. மேல் கல்விக்கு ஆங்கிலம் மற்றும் கணிதமும் மிகத் தேவை. அதைக் கருத்தில் கொண்டு இந்த நான்கு பாடங்களையும் நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம் என அவர் விளக்கம் அளித்தார்.

மாணவர்கள் மேற் கல்வியைத் தொடர்ந்து சிறந்த எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது எங்களின் தெளிவான சிந்தனையாக இருக்கின்றது.

இஃது ஒரு மெய்நிகர் பயிற்சி திட்டம் என்பதால் இணையம் வாயிலாக மலேசியாவில் எந்தப் பகுதியில் இருந்தும் மாணவர்கள் வகுப்புகளில் இணைந்து கொள்ளலாம். வகுப்புகளை நடத்த ஆற்றல் மிக்க ஆசிரியர்களை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம்.

இதில் இணைந்துகொள்ள kitaanakmalaysia.club இல் உள்நழைந்து இப்போதே பதிந்து கொள்ளலாம். முதல் வகுப்பு ஜூலை 4ஆம் தேதி தொடங்கும். இந்த வாய்ப்பை இந்திய மாணவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென மௌர்நா கூறினார்.

நாம் மலேசிய குழந்தைகள் (Kita Anak Malaysia) கிளப்பின் ஒத்துழைப்புடன் மௌர்நாவின் மேற்பார்வையில் நடைபெறவுள்ள இந்த கல்வி நடவடிக்கைக்கு கெராக்கான் கட்சியின் கல்வி பிரிவு முழுமையான ஆதரவு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here