மக்களுக்கு சேவையாற்றுபவர்கள் மக்கள் மனங்களில் வாழ்வர் என்பது நிதர்சனமான உண்மை.
அவ்வகையில் மக்கள் சேவையை குறிப்பாக ஏழை எளியோருக்கு களமிறங்கி உதவி செய்த இங்கிலாந்து இளவரசி டாயானாவின் பாதச்சுவட்டை பின்பற்றி தன்னுடைய இளம் வயதிலேயே மக்கள் சேவையில் நிறைந்த ஈடுப்பாட்டுடன் செயல்பட்டு வரும் கெடா கூலிமைச் சேர்ந்த பிரவினா ராமகிருஷ்ணன் பிரசித்தி பெற்ற 2020 டாயானா விருது வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டிருக்கிறார்.
இந்த விருதை பெறுவதன் மூலம் தனது குடும்பத்தாருக்கு மட்டுமின்றி பிரவினா, இந்நாட்டு இந்திய சமுதாயத்திற்கு பெரும் பெயரை பெற்றுத் தந்துள்ளார்.
இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் உலக மக்களின் இதயங்களில் ஓர் அழகு தேவதையாகவும் இன்றளவும் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் மறைந்த இளவரசி டாயானாவின் பெயரில் ஆண்டு தோறும் இந்த பிரசித்தி பெற்ற விருது வழங்கப்படுகிறது.
இங்கிலாந்து டாயானா விருது அமைப்பு மக்கள் சேவையில் ஈடுப்படிருப்பவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று சிறந்தவர்களை தேர்வு செய்து இளவரசி டாயானாவின் பெயரிலான இவ்விருதினை வழங்கி வருகிறது. சிறு வயது முதலே டாயானாவின் மக்கள் சேவையில் குறிப்பாக ஏழை எளிய மக்களின் துயர் துடைப்பதில் டாயானாவின் பொதுச் சேவையில் ஈர்க்கப்பட்ட பிரவினாவும் அவ்வழியை தன் வழியாக பின்பற்றி மக்கள் சேவையில் தன்னை முழுமையாக ஈடுப்படுத்திக் கொண்டார்.
நாட்டில் எந்த பகுதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சமூகவலைத்தளங்களில் வரும் தகவல்களை சேகரித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை கொண்டுச் சேர்ப்பதில் அளாதி ஆர்வம் கொண்டு செயல்பட்டு வருகிறார்.
இவரது தந்தை ராமகிருஷ்ணன் மஇகா பாடாங் செராய் கிளைத் தலைவராக இருந்து சேவையாற்றி வருகிறார்.
மலேசியாவில் இருந்து பல நூறு விண்ணப்பங்களை டாயானா விருது அமைப்பினர் பெற்றிருந்தாலும் பிரவினாவின் சேவைகளில் நிறைந்த திருப்தி அடைந்து 2020 டாயானா விருதுக்கு பிரவினாவை தேர்வு செய்தனர்.
கடந்த ஜூலை 1ஆம் தேதி இந்த அறிவிப்பும் விருதளிப்பும் இங்கிலாந்திலிருந்து நேரலையாக அறிவிக்கப்பட்டது.
மஇகா தலைமையகத்தில் முதலாவது மாடியின் இரவு 10 மணிக்கு பெரிய வென் திரையில் இந்த வரலாற்றுப்பூர்வ அறிவிப்பு ஒளிப்பரப்பானது.
மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் உலக பிரசித்திப் பெற்ற பிரவினாவை மனதார பாராட்டி கெளரவித்தார். இது இந்திய சமுதாயத்தின் பெருமை என்று அவர் புகழ்ந்துரைத்தார்.
தேசிய தலைவர் சார்பில் மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ தோ.முருகையா பிரவினாவை பாராட்டி சிறப்பு செய்தார். மஇகா தேசிய இளைஞர் பிரிவு தலைவர் தினாளன் டத்தோ ராஜகோபாலு தமது செயற்குழுவினரோடு இணைந்து பிரவினாவை கெளரவிக்கும் அனைத்து ஏற்பாடுகளையும் முன்நின்று கவனித்துக் கொண்டார்.
இனத்திற்கு பெருமை சேர்த்திருக்கும் பிரவினாவுக்கு மக்கள் ஓசை டிவி, ஆன்லைன் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.