நேற்று ஞாயிற்றுக் கிழமை மதியம் 3.30 மணியளவில் பெட்டாலிங் ஜெயா போதைப் பொருள் புலனாய்வு துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் கெத்தும் நீர் விநியோகத்தில் ஈடுப்பட்ட 55 வயது நிரம்பிய ஆடவர் கைது செய்யப்பட்டார் என்று பெட்டாலிங் ஜெயா ஓசிபிடி நிக் எஸானி முகமட் பைசல் தெரிவித்தார்.
அவர் கொடுத்த தகவலின் மூலம் தாமான் மெடானில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனில் 235 கெத்தும் நீர் அடங்கிய பொட்டல்கள் இருந்தன. மொத்தம் 352,500 லிட்டர் கொண்ட அந்த பொட்டல்களை 1880 பேருக்கு விநியோகம் செய்யலாம். அவற்றின் மொத்த மதிப்பு 4,700 வெள்ளியாகும்.
அதுமட்டுமின்றி கெத்தும் நீரை செய்வதற்குரிய பொருட்களும் இருந்தன. எனவே அந்த வேன் உட்பட அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தாமான் மெடான் வட்டாரத்தில் கெத்தும் நீர் வியோகத்தில் இந்த ஆடவர் ஈடுப்பட்டுள்ளார். போலீசார் மேல் விசாரணைக்காக அவரை 4 நாட்களுக்கு தடுத்து வைத்துள்ளனர் என்று நிக் எஸானி கூறினார்.
மேலும், அதே தினத்தில் இரவு 10.30 மணியளவில் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஓர் வீட்டில் இரு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவம் கெத்தும் நீர் விநியோகத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்தும் கெத்தும் நீர் பொட்டல்கள், கெத்தும் நீர் செய்யும் பொருட்கள் அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
26 மற்றும் 24 வயதுடைய அவர்கள் இருவரும் மேல் விசாரணைக்காக 4 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.