கோலாலம்பூர்: சமூக பாதுகாப்பு அமைப்பால் (சொக்சோ) முகவர்கள் அல்லது தனிநபர்கள் நியமிக்கப்பட்டவில்லை என்பதோடு இந்த அமைப்பு சேவைகளை இலவசமாக வழங்குகிறது என்று சொக்சோ தலைமை நிர்வாக அதிகாரி டத்தோஶ்ரீ டாக்டர் முகமது அஸ்மான் அஜீஸ் முகமது (படம்) கூறினார். தங்கள் கோரிக்கைகளுக்கு உதவி தேவைப்படும் சொக்சோ உறுப்பினர்கள் நாடு தழுவிய அளவில் இயங்கி வரும் சொக்சோ அலுவலகங்களுக்கு செல்ல வேண்டும் என்றார்.
சொக்சோ உரிமைகோரல்களுக்கு உதவ எந்தவொரு முகவர்களையும் அல்லது பிரதிநிதிகளையும் நாங்கள் ஒருபோதும் நியமிக்கவில்லை என்பதை மீண்டும் மக்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம். இதுபோன்ற முகவர்களிடம் தொடர்பு கொண்டவர்கள், தயவுசெய்து முன் வந்து எங்களுக்குத் தெரியப்படுத்தினால் எங்களால் நடவடிக்கை எடுக்க முடியும் என்று டாக்டர் முகமது அஸ்மான் புதன்கிழமை (ஜூலை 8) ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். இந்த வாரம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி) கைது செய்ததைத் தொடர்ந்து அவர் இதைத் தெரிவித்தார்.
10 லட்ச வெள்ளி தொகை சம்பந்தப்பட்ட கூற்றுகளுக்கு சூத்திரதாரி என்று குற்றம் சாட்டப்பட்ட ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் திங்கட்கிழமை (ஜூலை 6) எம்ஏசிசியால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கணவர், மனைவி மற்றும் மகள், 35 முதல் 67 வயதுக்குட்பட்டவர்களாவர். அவர்கள் புத்ராஜெயா எம்ஏசிசியால் பொய்யான சொக்சோ சம்பந்தப்பட்ட விஷயத்திற்காக கைது செய்யப்பட்டனர்.
ஆதாரங்களின்படி, சந்தேக நபர்கள் சொக்சோவிலிருந்து நிரந்தர மற்றும் தற்காலிக குறைபாடுகள் இருப்பதற்கான உரிமைகோரல்களை வழங்குவதற்காக தவறான மருத்துவ அறிக்கைகளை வழங்க ஒரு சிண்டிகேட் முகவர்களாக செயல்பட்டதாக நம்பப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்த மருத்துவ அறிக்கைகளில் சொக்சோவில் இருந்து இழப்பீடு பெற அனுமதித்த தவறான தகவல்கள் இருப்பதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
டாக்டர் முகமது அஸ்மான் அத்தகைய கும்பல்களிடம் ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களுக்கு நினைவுபடுத்தினார், மேலும் இந்த கும்பல் தங்களை அணுகும் நபர்களிடம் இருந்து RM15,000 முதல் RM20,000 வரை வசூலிக்கின்றனர். அதிக உரிமைகோரல்கள் இருந்தால் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகின்றன என்றார். எந்தவொரு மோசடி உரிமைகோரல்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க சொக்சோ தயக்கம் காட்டாது என்றும் டாக்டர் முகமது அஸ்மா தெரிவித்தார்.