இந்தியாவிடம் இருந்து உலகம் பாடம் கற்கலாம்’- இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பேச்சு

நிலையான எதிர்காலத்தை உருவாக்குவது எப்படி என இந்தியாவிடம் இருந்து உலகம் பாடம் கற்றுக்கொள்ளலாம் என இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பேசினார்.

இங்கிலாந்து தலைநகரான லண்டனில் நடைபெற்ற ‘இந்தியா குளோபல் வீக்’ என்னும் இந்திய உலகளாவிய வார உச்சி மாநாட்டில், அந்த நாட்டின் இளவரசர் சார்லஸ், காணொலி காட்சி வழியாக பங்கேற்று பேசினார்.

அப்போது அவர், இந்தியாவின் நிலையான வாழ்க்கை முறையை புகழ்ந்துரைத்தார். நிலையான எதிர்காலத்தை உருவாக்குவது எப்படி என இந்தியாவிடம் இருந்து உலகம் பாடம் கற்றுக்கொள்ளலாம் என குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசுகையில் அவர் கூறியதாவது:-

தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடியில் இருந்து உலகத்தை மீண்டும் கட்டியெழுப்புவதை மக்கள் பார்க்க வேண்டும்.

நிலையான வாழ்க்கை என்பதன் முக்கியத்துவம் பற்றி நான் பிரதமர் மோடியுடன் பேசினேன்.

தன்னை புதுப்பித்துக்கொள்ள முற்படும்போது, உலகம், இந்தியாவிடம் இருந்து அபரிகிரகா என்ற (உடைமை கொள்ளாத நற்குணம், பேராசையில்லாத தன்மை) பண்டைய யோக ஞானத்தை கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது.

இந்தியா எப்போதும் இதை புரிந்து கொண்டது. அதன் தத்துவமும், மதிப்புகளும் நிலையான வழியை வலியுறுத்துகின்றன.

அபரிகிரகா யோக கொள்கை, வாழ்க்கையின் குறிப்பிட்ட கட்டத்தில் அவசியமானவற்றை மட்டுமே வைத்துக்கொள்ள நம்மை ஊக்குவிக்கிறது. பண்டைக்கால ஞான உதாரணங்களில் இருந்து நாம் கற்றுக்கொள்ள முடியும்.

இங்கிலாந்தில் இந்திய புலம் பெயர்ந்தோர் சமூகத்தின் பல உறுப்பினர்களுடன் நான் பல விவாதங்களை நடத்தி இருக்கிறேன். அவற்றில், ஒரு நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதில் இந்தியாவின் பங்களிப்புக்கான லட்சியத்தால் நான் எப்போதும் பெரிதும் ஊக்குவிக்கப்படுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here