மதுரையில் ரூ.10 க்கு உணவு – ஏழைகளின் பசி போக்கி வந்த ராமு தாத்தா காலமானார்

மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே சிறிய பெட்டிக்கடை நடத்தி பத்து ரூபாய்க்கு உணவு வழங்கி வந்தவர் திருமங்கலம் வில்லூரை சேர்ந்த ராமு தாத்தா.  மதுரை மக்களின் இதயத்திலும்,  அண்ணா பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் மக்களின் மனதிலும் நிலையான இடம் பிடித்தவர் மதுரை ராமு தாத்தா.   அவர் மக்களுக்கு வழங்கிய உணவின் விலை மிக குறைவானது என்பதை விட அவர் மக்கள் இடத்தில் உணவுடன் அன்பையும் சேர்த்து பரிமாறப்பட்டதுதான் அவரது தனிச்சிறப்பு. இந்த அன்பு தான் பல வாடிக்கையாளர்களை ஈர்த்தது.

1957 ஆம் ஆண்டு வடலூரில் உள்ள வள்ளலாரின் சத்திய ஞான சபைக்கு சென்ற மதுரை ராமு தாத்தா, வள்ளலாரை போன்று தன்னால் ஆன உதவியை ஏழை மக்களுக்கு வழக்க வேண்டும் என்ற நோக்கில்,  ஏழை மக்களுக்கு உணவளிக்க வேண்டும் என்ற சேவையுணர்வில், 1967 ஆண்டு வெறும் ஒன்னே கால் ரூபாய்க்கு காய்கறி கூட்டுகளுடன் சாப்பாடு வழங்க தொடங்கினர் ராமு தாத்தா. இவருக்கு அவரது மனைவி பூரணத்தம்மாளும் துணையாக இருந்தார். இவர்களுக்கு 4 மகன்கள், 3 பெண்கள்.

ஆரம்ப கால கட்டத்தில் வெறும் ஒன்னே கால் ரூபாய்க்கு காய்கறி கூட்டுடன் சாப்பாடு வழங்க தொடங்கிய இவர், நாளடைவில் பொருளாதாரம் மற்றும் விலை வாசி வளர்ச்சி அடைந்த நிலையில் 2 ரூபாய், 5 ரூபாய் எனச்சாப்பாட்டு விலையையும் ராமு தாத்தா சிறிது சிறிதாக உயர்த்தி வந்தார்.  எனினும் அவரின் சாப்பாட்டின் தரம் குறையவில்லை.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என முக்கிய சந்திப்புகளை கொண்ட அண்ணா பேருந்து நிலையம் அருகே ராமு தாத்தா கடை அமைந்து இருக்க அங்கு வருபவர்கள் ராமு தாத்தா கடைக்கும் உணவு சாப்பிட வருவார்கள்.   மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள்,  அன்றாட கூலித்தொழிலாளர்கள் இவரது உணவகத்தில் வந்து நிறைவாக சாப்பிடுவார்கள்.

காலையில் 2 வகை சட்டினியுடன்  இட்லி, தோசை, பொங்கலும், மதியம் 2 பொறியல், ரசம், சாம்பார், அப்பளம், மோருடன் சாப்பாடும் வெறும் 10 ரூபாய்க்கு வழங்கி வந்தார்.  இன்று விற்கிற விலைவாசிக்கு மதுரையில் 100 ரூபாய்க்கே அளவு சாப்பாடு போடும் ஹோட்டல்களுக்கு மத்தியில் 10 ரூபாயில் ஏழைகளின் பசியை போக்கி வந்த அட்சய பாத்திரமாக ராமு தாத்தா திகழ்ந்து வந்தார்.

இவரது சேவையை பாராட்டி மதுரையில் பல்வேறு அமைப்புகள் விருதுகள் வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக உடல் நலக்குறைவால் காலமான இவர் மனைவியை பிறிந்த நிலையிலும், தளராத மனதுடன் மக்களுக்கு உணவு அளித்து வந்தார்.  இந்நிலையில் கடந்த சில மாதமாக வயோதிகத்தாலும், உடல் நலகுறைவாலும்  பாதிக்கப்பட்டிருந்த அவரால் கடையைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த ராமு தாத்தா காலமானார். இவரது இறப்பு அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

மதுரை ராமு தாத்தாவின் மரணம், அவரது உணவகத்தில் அன்றாடம் பசியாறி வந்த அன்றாட கூலித்தொழிலாளர்கள், ஏழை மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here