ஊழலில் சம்பந்தப்படும் வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 17A கீழ் நடவடிக்கை

2009 மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் செக்க்ஷன் 17A (SEKSYEN 17A ASPRM 2009) இவ்வாண்டு ஜூன் 1ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தப்பட்டது.
கடந்த மே 21ஆம் தேதி இந்தச் சட்டம் அமல்படுத்துவது குறித்து பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக செய்தியை வெளியிட்டது. அதனை அடுத்து மே 27ஆம் தேதி அமைச்சரவை அதிகாரத்தின் வாயிலாக இச்சட்டம் அரசாங்கத்தின் பதிவேட்டில் இடம் பெற்றது.

வியாபார நோக்கத்துடன் செயல்படும் வர்த்தக நிறுவனங்கள்- குழுமங்கள் தொடர்புடைய ஊழல் சம்பவங்களுக்கு இந்த சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

இது குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் துணை தலைமை ஆணையர் (தடுப்புப் பிரிவு) டத்தோ ஷாம்சூன் பஹாரின் முகமட் ஜமீல் விளக்கமளித்துள்ளார்.

கே: ஏற்கெனவே 2009 ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் செக்க்ஷன் 17(A) என்ற பிரிவு உள்ளது. தற்போது 2009 ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் செக்க்ஷன் 17A என்ற பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் இவ்விரு சட்டங்கள் குறித்தும் குழப்பம் உள்ளதாகத் தெரிகின்றதே…

பதில்: வாய்மொழியில் உச்சரிக்கும்பொழுது இவ்விரு சட்டப் பிரிவுகளும் ஒன்றுதான் என்பதுபோல் இருக்கும். எனவேதான் இந்தக் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால், எழுத்து ரீதியாக கவனித்தால் இரண்டுமே மாறுபடும்.

அடிப்படையில் கடப்பாட்டினை மீறி வேறு தரப்பினரிடமிருந்து ரொக்கத் தொகை அல்லது பொருட்கள் ரீதியாக அரசாங்க ஊழியர்கள் லஞ்சம் கேட்டாலோ அல்லது வாங்கினாலோ செக்க்ஷன் 17(A) என்ற பிரிவின் கீழ் நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

ஆனால், புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள செக்க்ஷன் 17A என்ற பிரிவில் வருமானம் ஈட்டக்கூடிய நிறுவனங்கள், குழுமங்களைச் சார்ந்த தொழிலாளர்கள் மற்றும் கூட்டமைப்பாளர்கள் அதன் லாபத்திற்காக கேட்டாலோ அல்லது வாங்கினாலோ அது குற்றமாகக் கருதப்படும்.

எளிய முறையில் சொன்னால் செக்க்ஷன் 17(A) பிரிவானது லஞ்சக் குற்றத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் தனிநபர் (அரசாங்க ஊழியர்) உட்பட்டதாகும். மாறாக, செக்க்ஷன் 17A பிரிவானது லஞ்சக் குற்றத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நிறுவனங்களை உட்படுத்தியதாகும்.

கே: இந்த செக்க்ஷன் 17A பிரிவு குறித்து இன்னும் விளக்கமாகக் கூற முடியுமா

பதில்: வருமானம் சார்ந்த ஒரு நிறுவனம் அல்லது குழுமத்தைச் சேர்ந்த ஊழியர் மற்றும் கூட்டமைப்பாளர்கள் தங்களின் நிறுவனங்களுக்கு லாபம் ஈட்டுவதற்காக லஞ்ச நடவடிக்கையில் ஈடுபட்டால் அது குற்றமாகும்.

இந்தப் பிரிவின் அடிப்படையில் அந்த நபர்களின் செயலை நிறுவனத்தின் மேல்மட்ட தரப்பினர் அறிந்திருந்தாலும் அல்லது அறியாவிட்டாலும் அந்நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

கே: இந்தப் பிரிவின் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை என்ன?

ப: குற்றம் நிரூபிக்கப்பட்டால் செக்க்ஷன் 17A (2) பிரிவின் அடிப்படையில் குறிப்பிட்ட லஞ்சத் தொகைக்கு 10 மடங்கு அதிகமான தொகையில்/ ஒரு மில்லியன் வெள்ளி அபராதம் விதிக்கப்படும் அல்லது 20 ஆண்டுவரை சிறைத்தண்டனை வழங்கப்படும். சில சமயங்களில் இரு தண்டனைகளும் சேர்த்து வழங்கப்படும். இருப்பினும், செயல்பாட்டில் தேவைப்படும் அளவு நெறி இருந்தால் தங்களைப் பாதுகாக்க அந்நிறுவனங்களுக்கு வழக்கில் வாய்ப்பளிக்கப்படும்.

கே: செக்க்ஷன் 17A சட்டப் பிரிவின் நடைமுறை அடிப்படைக் கொள்கைகளில் மேல்மட்ட நிர்வாகத்தினரின் பங்களிப்பும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் பங்களிப்பு என்னவென்று விளக்க முடியுமா?

ப: நாட்டில் ஊழல் தடுப்பு குறித்து அமல்படுத்தப்பட்டுள்ள சட்டம் மற்றும் விதிமுறைகளை வர்த்தக நிறுவனங்களில் உள்ள அனைவரும் முழுமையாகக் கடைப்பிடிப்பதை அதன் மேல்மட்ட நிர்வாகத்தினர் தான் உறுதி செய்ய வேண்டும். அதே சமயம் குழுமத்தின் சாவாலை எதிர்கொள்ளும் செயல்பாட்டினையும் பயனுள்ள வகையில் அமல்படுத்துவதையும் அத்தரப்பினரே உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து வகையிலும் நேர்மை மற்றும் பொறுப்புடைமையை வழங்குவதில் இதர ஊழியர்களுக்கு மேல்மட்ட தரப்பினர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும்.

கே: இந்த 2009 ஊழல் தடுப்பு ஆணைய ஙெ்க்ஷன் 17அ பிரிவு அமலாக்கத்திற்கு ஆணைய அதிகாரிகள் எவ்வளவு தூரம் தயார்படுத்தப்பட்டுள்ளனர்?

ப: 2018ஆம் ஆண்டு தொடங்கி ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் குறிப்பாக தடுப்புப் பிரிவில் உள்ளவர்களுக்கு இந்த சட்டப் பிரிவு குறித்து விளக்கமும் பயிலரங்கமும் வழங்கப்பட்டு வருகிறது.

இருந்தபோதிலும், இந்த சட்டப் பிரிவு புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ளதால் எண்ணிக்கை மற்றும் தர அடிப்படையில் அதிகாரிகள் மத்தியில் சவால் ஏற்படுவதும் மறுக்க முடியாது.

உதாரணத்திற்கு இந்தச் சட்டப் பிரிவு அதிகாரிகள் அனைவரும் முழுமையான புரிந்துணர்வு கொண்டிருக்க வேண்டும். இதன் வாயிலாகத்தான் அதிகாரிகள் சட்டப் பிரிவு குறித்து பொதுமக்களுக்கு குறிப்பாக வியாபார நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு தகவல் வழங்க முடியும்.

நாட்டிலுள்ள வர்த்தக நிறுவனங்களைக் காட்டிலும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிகமில்லை.

இதனால், இந்த புதிய சட்டப் பிரிவு குறித்து அனைத்து நிறுவனங்களுக்கும் தகவல் வழங்க முடியாத சுழலும் ஏற்படுகிறது.

மேலும், இந்த 17A சட்டப் பிரிவை அமல்படுத்துவது குறித்து ஊழல் தடுப்பு ஆணையம் முன்னதாக பல நாடுகளைச் சேர்ந்த சட்டங்களை வைத்து ஆய்வு நடத்தியுள்ளது.

குறிப்பாக இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளில் இத்தகைய சட்டப் பிரிவு எப்படி செயல்படுத்தப்படுகின்றது என்பதையும் அங்குச் சென்று நேரடியாக கண்டு ஆய்வு நடத்தியுள்ளோம்.

கே: 2009 ஊழல் தடுப்பு ஆணைய சட்டம் செக்க்ஷன் 17A பிரிவிற்கு சமூகத்திடமிருந்து எத்தகைய வரவேற்பு கிடைக்கின்றது?

ப: ஊழல் நடவடிக்கையை முறியடிக்க ஆணையம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் அனைத்திற்கும் மக்கள் பெரும் வரவேற்பு நல்கியுள்ளனர். அதேபோல் செக்க்ஷன் 17A சட்டப் பிரிவிற்கும் அவர்கள் ஆதரவு வழங்குகின்றார்கள் என்றே கூற வேண்டும்.

கடந்த ஆண்டு ஏப்ரல் தொடங்கி இவ்வாண்டு ஏப்ரல் வரை அமைச்சு, இலாகா, பொதுச் சேவைப் பிரிவு என 14 அமைப்புகளைச் சார்ந்த 1,050 பங்கேற்பாளர்கள் இச்சட்டப் பிரிவு குறித்து நடத்தப்பட்ட பயிலரங்கத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் கடந்தாண்டு மே மாதம் தொடங்கி இவ்வாண்டு மார்ச் மாதம் வரை இச்சட்டப் பிரிவுகளுக்கு நடத்தப்பட்ட பயிலரங்குகளில் அரசாங்கச் சம்பந்தமுடைய நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் என 38 அமைப்புகளைச் சார்ந்த 6,047 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கே:நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டதால் பொருளாதாரம் பாதிப்புற்ற காலகட்டத்தில் 2009 ஊழல் தடுப்பு ஆணைய சட்டம் செக்க்ஷன் 17A பிரிவை அமல்படுத்துவதால் பொருளாதாரத்தை மீட்சியடையச் செய்ய முடியும் எனக் கூறப்படுகின்றது. அது குறித்து உங்களின் கருத்து…

ப: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலகட்டத்திற்குப் பிறகு லாபம் ஈட்டும் போட்டியில் வர்த்தக நிறுவனங்கள் ஈடுபடாததை உறுதி செய்வதற்கு இந்தச் சட்டப்பிரிவு கருவியாக கருதப்படுகின்றது.

பொருளாதார நெருக்கடி காலகட்டத்தில் கையிருப்பு பெருமளவில் குறைந்ததால் வழக்க நிலைக்குத் திரும்பிய பின்னர், வர்த்தகத்தில் உள்ளவர்கள் பெரும் லாபம் ஈட்ட ஊழலில் ஈடுபடுவது உட்பட அனைத்து வகையிலும் முயற்சி செய்ய வாய்ப்புள்ளது.

அதனை எதிர்கொள்ள இந்த சட்டப்பிரிவு அமலாக்கம் சிறப்பாய் செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனிடையே, லஞ்ச நடவடிக்கையை எதிர்க்கும் வகையில் இந்த செக்க்ஷன் 17A சட்டப் பிரிவை அரசாங்கம் அமல்படுத்தியுள்ளதால் மலேசிய விற்பனைத் துறையின் மீது அந்நிய முதலீட்டாளர்களுக்கு பெரும் நம்பிக்கை ஏற்படவும் வாய்ப்புள்ளது.

இந்த சட்டப் பிரிவைப் பின்பற்றுவதால் வர்த்தக நிறுவனங்களும் புதிய வழமையில் தங்கள் வர்த்தக நடவடிக்கைகளை நேர்மையாக வழி நடத்துவதோடு லாபத்திற்காக தங்கள் பணியாளர்கள் கையூட்டு கேட்பது- வாங்குவதைத் தவிர்ப்பதையும் உறுதி செய்ய முடியும்.

கே:2009 ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் செக்க்ஷன் 17A அமல்படுத்துவது தொடர்பில் வர்த்தக நிறுவனங்களுக்கு உங்களின் அறிவுரை?

ப: அனைத்து வர்த்தக நிறுவனங்களும் ஊழல் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்பதே எனது எதிர்பார்ப்பு. முன்னதாக ஊழல் நடவடிக்கையில் நேரடியாக ஈடுபட்டிருந்த நபர் மீதுதான் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆனால், இந்தப் புதிய சட்டப் பிரிவு அமலாக்கத்தின் வாயிலாக லஞ்சக் குற்றத்தில் நேரடியாக நிறுவனங்கள் சம்பந்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால் (போதுமான ஆதாரம் சமர்ப்பிக்கப்பட்டால்) அந்த நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, இந்தப் புதிய சட்டப் பிரிவை வர்த்தக நிறுவனங்கள் முழுமையாக உள்வாங்கிப் புரிந்து கொள்ள வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்.
இந்நிலையில் கடந்த மாதம் தொடக்கத்தில்தான் இந்தப் பிரிவு அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தப்பட்டுள்ளதால் இன்னும் சில தரப்பினர் முழுமையான புரிதலைக் கொண்டிருக்காமல் போகலாம்.

ஆனால், அமல்படுத்துவதற்கு முன்னமே தேவையான முன்னேற்பாடுகள் செய்வதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இரு ஆண்டுகளுக்குத் தயார்ப்படுத்தும் கால அவகாசத்தை வழங்கியுள்ளது.

எனவே, முழுமையாகத் தெரிந்து கொள்ள போதிய நேரம் இல்லை என்பதை காரணமாக ஏற்றுக் கொள்ள முடியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here