உபயோகப்படுத்திய உயர்தரத்துணியில் முகக்வசங்கள்

தொடர்ந்து முகக்கவசம் அணியவேண்டும் என்பது நடைமுறை பழக்கமாகிவிட்டது. இப்பழக்கம் நன்மையைக் கொண்டுவரும் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும், இதில் ஒரு சிக்கலும் இருக்கிறது.

பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு விட்டன. மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும். இந்தச்சூழ்நிலையில் மணவர்கள் ஒரே முகக்கவசத்தை மறுநாளும் தொடர்ந்தும் அணியவேண்டியவர்களாகிவிடுவர். சிலரால் புதிய முகக்கவசங்களை வாங்கிக்கொள்ள முடியாது.

இதற்கான நடவடிக்கை எதுவாக இருக்கும்? பள்ளி நிர்வாகம் இதை எப்படிக் கையாளும் என்பதையும் பலர் கேள்வியாக முன்வைத்துள்ளனர்.

ஆனாலும், நாட்டின் பிரபல ஹோட்டல் குழுமத்தினர் ஒரு சிறப்பான முயற்சியை மேற்கொண்டிருப்பது சிறந்த முன்னுதாரணமாக விளங்குகிறது. இந்த ஹோட்டல் நிர்வாகம் பிரபல சலவை நிறுவனத்துடன் இணைந்து, பயன் படுத்திய நேர்த்தியான துணிகளைக்கொண்டு முகக்கவசங்கள் தயாரித்து பள்ளிக்கூடங்கள், ஆசிரமங்களுக்கு வழங்கவிருக்கிறார்கள்.

அன்பும் அரவணைப்பும் என்ற தொண்டு எண்ணத்தின் மூலம் இவற்றைச்செய்ய முன்வந்திருக்கிறார்கள். இதற்காக 12,500 கிலோ எடையுள்ள துணியை சேமித்திருக்கிறார்கள். இதைக்கொண்டு 5 லட்சம் முகக்கவசங்களைத்தயாரிக்க முடியும். அதுமட்டுமல்ல, இம்முகக்கவசங்களை துவைத்து அணிந்துகொள்ள முடியும் என்பதால் மாணவர்களுக்கும் முதியோர், சிறார் இல்லங்களுக்கும் இது பொருத்தமாக இருக்கும்.

இம்முகக்வசங்கள் அவசியமாய் தேவைப்படும் சாதாரணமக்களுக்குப் போய்ச்சேரவேண்டும் என்பதிலும் கவனமுடன் இருப்பதாக இதை ஏற்பாடு செய்திருக்கும் நிறுவன இயக்குநர் ஒருவர் கூறியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here