நிறங்கள் நிஜங்களல்ல

நிறம் வெளுப்பாக இருந்தால் ஏழாம் அறிவாளிகள் என்று அர்த்தமாகிவிடாது. இது வரை அப்படி எந்த ஆய்வுகளிலும் கூறப்பட்டதாக ஆதாரங்கள் இல்லை.

மனித நிறம் ஓர் அடையாளம் மட்டுமேயன்றி வேறொன்றுமில்லை. அப்படியிருக்க நிறத்தை அடையாளமாகக் கொள்ளாமால் அதை வைத்து அசிங்கப்படுத்துவது அழகான செயல் அல்ல.

ஒரு மனிதனின் ஆற்றலை வெளிப்படுத்துவது அறிவு. அறிவில்லாதவர்கள்  எவரும் இல்லை. அதன் ஆற்றல் சிலருக்குக்கூடுதல் குறைவாக இருக்கலாம். தங்கள் அறிவாண்மைக்கு ஏற்ப யார் யாருடன் நட்பு வைத்திருக்கிறார்கள், யார் யாருடன் எதிர்ப்பாக இருக்கிறார்கள் என்பதை அறிய முடியும்.

ஒட்டுமொத்தாமாக சொல் ஒன்றுதான் ஆயுதமாக இருக்கும். சொல்தான் காக்கும் கேடயமாகவும் இருக்கும். அதே சொல்தான் தாக்கும் ஆயுதமாகவும் இருக்கும். கொல்லும் ஆயுதாமாகவும் மாறும்.

மலேசிய இந்தியர்கள் அவமானப்படுவதும், அவமானப்படுத்தப்படுவதும் புதிதல்ல. இது தொடர்கதை. இது இன்னும் ஓயவில்லை. ஈரம் காயுமுன் ஏவுகணைபோல் சொல் அம்புகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

காய்த்த மரம் கல்லடிபடும் என்பது வார்த்தைக்கு அழகாக இருக்கலாம். அது விதியென்றும் இருந்துவிடவும் முடியாது.

கறுப்பு மனிதனை கொன்றதால் அமெரிக்க வெள்ளையர்களின் நிலை என்னவாகியிருக்கிறது என்பது உலகுக்கே தெரியும்.

பொறுமை ஒன்றுதான் மலேசியர்களின் (இந்தியர்கள்) ஆயுதமாக இருக்கிறது. தகாத வார்த்தைகளைப் பேசிவிட்டு மன்னிப்பு என்பது பழகிப்போனால் புதிய எஸ் ஓ பி  தான் சரியானதாக இருக்கும்.

பேசுகின்ற நாவுக்கும் கட்டுப்பாடு தேவை. பேசுமுன் யோசிக்காதவர்களுக்கு அறிவு வேலை செய்யவில்லை என்பதுதான் பதிலாக இருக்கும்.

இதைத்தான் மலேசிய இந்து சங்கம் கூறியிருக்கிறது. நாடளுமன்றத்தை அவமதிக்கும் வகையில் அவை உறுப்பினரை புண்படுத்தினால் அவை எடுக்கும் முடிவின் மீதே ஐயப்படவேண்டியிருக்கும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் வழிகாட்டிகளாக இருக்க வேண்டும் .

நாட்டில் இன பேதங்களை ஏற்படுத்துகின்றவர்களாக இருக்கக்கூடாது என்கிறார் அதன் தலைவர் எம்.முனியாண்டி. அவர் மட்டுமல்ல. நாட்டுமக்கள் எவராயினும் இன இழிவுகள் ஏற்கமாட்டார்கள்.

நல்ல மலேசியம் நிறத்தால் ஆனது அல்ல. நிஜத்தால் ஆனது. மலேசியக்கொடியும் அதைத்தான் உணர்த்துகிறது. ருக்குன் நெகாரா கோட்பாடும் அதைத்தான் உணர்த்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here